வடசென்னை அனல் மின் நிலையத்தில் கொதிகலன் கசிவு காரணமாக 810 மெகாவாட் மின்சார உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
வடசென்னை அனல் மின் நிலையத்தில் தினந்தோறும் 1,830 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கப்பட்டு வருகிறது. 3 அலகுகளில் தலா 210 மெகாவாட் மின்சாரமும், இரண்டு அலகுகளில் தலா 600 மெகாவாட் மின்சாரமும் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த மின் நிலையத்தில் உள்ள 1வது பிரிவில் கொதிகலன் கசிவு ஏற்பட்டது. இதனால் 600 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவது நிறுத்தப்பட்டுள்ளது.
இதனிடையே இதே மின் நிலையத்தின் 2வது அலகில் 210 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மொத்தமாக 810 மெகாவாட் மின்சார உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. தற்போதைக்கு பிற 3 பிரிவுகளில் உள்ள உற்பத்தி நிலையங்கள் மூலமாக 1,020 மெகாவாட் மின்சாரம் மட்டும் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
தற்போது தமிழ்நாடு முழுவதும் பரவலாக மழை பெய்து வருவதால் மின்விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இல்லை என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் மின் உற்பத்தியை மீண்டும் துவங்கும் வகையில், பழுதான பிரிவுகளில் சீரமைப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.