மதரஸாக்களில் உ.பி அரசு களஆய்வு!


நாட்டிலேயே இஸ்லாமியர்கள் மக்கள் தொகை அதிகமாக உள்ள மாநிலம் உத்தரப்பிரதேசம். இதனால், இம்மாநிலத்தில் இஸ்லாமியர்களுக்கான மதரஸாக்கள் அதிகம். வட மாநிலங்களின் முதல் கல்வி நிறுவனமாகக் கருதப்படும் இவற்றில் இந்துக்கள் உள்ளிட்ட அனைவரும் இணைந்து பயின்ற காலங்கள் இருந்தன. பிறகு பொதுகல்வி நிறுவனங்கள் பெருகிய பின் இஸ்லாமியர்கள் மட்டும் மதரஸாக்களில் தொடரும் நிலை ஏற்பட்டது. ஆனால், சமீப ஆண்டுகளாக இவை ஒரு ஒழுங்குமுறைக்குள் இல்லாமல் பல்வேறு குறைபாடுகளுடன் இயங்கி வருகின்றன. இதன் காரணமாக அதில் பயிலும் இஸ்லாமிய மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவதும் வெளியில் தெரியாமல் இருந்து வந்தது. இதன் மீது பாஜக ஆளும் உபி அரசின் முதல்வர் யோகி ஆதித்யநாத் கவனம் செலுத்தத் தொடங்கினார். இவை அனைத்தையும் ஒழுங்குப்படுத்த வேண்டி அவற்றின் மீது களஆய்வு நடத்த உத்தரவிட்டிருந்தார்.

சிறுபான்மை நலத்துறையின் உபி மதரஸா வாரியம், அனைத்து மாவட்ட நிர்வாகங்களுடன் இணைந்து இந்த களஆய்வை நடத்தி வருகிறது. கடந்த மாதம் செப்டம்பர் 10 முதல் தொடங்கிய இந்த ஆய்வு தற்போது முடிவிற்கு வரும் நிலையில் உள்ளன. உபியில் பல்ராம்பூர், பைரைச், கோண்டா ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளில் கடுமையான மழைவெள்ளம் காரணமாக இன்னும் களஆய்வு முடிவடையவில்லை. இதுவரை கண்டவற்றில் அங்கீகரிக்கப்பட்டவையாக 16,513 மதரஸாக்களும், அதில் அங்கீகரிக்கப்படாதவையாக 7,189 இயங்குவது தெரிந்துள்ளது. சுமார் 20 லட்சம் மாணவ, மாணவிகள் பயிலும் அங்கீகரிக்கப்பட்டவையில் 560 மதரஸாக்களுக்கு மட்டுமே உபி அரசின் நிதி உதவி கிடைக்கிறது.

இது குறித்து உபி மதரஸா கல்வி வாரியத்தின் தலைவர் டாக்டர் இப்திகார் அகமது ஜாவீத் கூறும்போது, ‘கடந்த ஏழு வருடங்களாக எந்த மதரஸாவிற்கும் அங்கீகாரச் சான்றிதழ் அளிக்கப்படவில்லை. இதற்காக, அங்கீகாரம் பெறாத மதரஸாக்களை சட்டவிரோதமானவை எனப் பொருள் கொள்ளக்கூடாது. இவை அனைத்திற்கும் அடிப்படை வசதிகளை மேம்படுத்தி அங்கீகாரம் பெற வாய்ப்பளிப்பதுடன், அவைகளுக்கு உபி அரசின் நிதி உதவி கிடைக்கும் வாய்ப்பும் உள்ளன. இவற்றில் பயிலும் சுமார் 16,000 மாணவ, மாணவிகளின் எதிர்காலத்திற்கு பாதுகாப்பு அளிக்க உபி அரசு விரும்புகிறது’ எனத் தெரிவித்தார்.

இந்த களஆய்விற்கான உத்தரவிற்கு எதிர்க்கட்சிகளான சமாஜ்வாதியின் அகிலேஷ்சிங் யாதவ், பகுஜன் சமாஜின் மாயாவதி, ஏஐஎம்ஐஎம் கட்சியின் அசதுத்தீன் உவைஸி மற்றும் அகில இந்திய இஸ்லாமிய தனிச்சட்ட வாரியம் உள்ளிட்ட பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆய்வு எனும் பெயரில் பாஜக அரசு இஸ்லாமியர்களை குறி வைப்பதாகவும், மதரஸா கல்விக்கு முற்றுப்புள்ளி வைக்க முயல்வதாகவும் புகார் தெரிவித்திருந்தனர். எனினும், உபியின் தியோபந்த் நகரிலுள்ள உலகப் புகழ் பெற்ற பழம்பெரும் மதரஸாவான தாரூல் உலூமில் களஆய்வு மீது ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. இதில், உபியின் சுமார் 400 மதரஸாக்களின் நிர்வாகிகள் கலந்துகொண்டனர். தாரூல் உலூமின் மூத்த பேராசிரியரும் ஜமாயத்-எ-உலாமா ஹிந்தின் தலைவருமான மவுலானா சையது அர்ஷத் மதானி தலைமையில் இக்கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்திற்கு பின் மவுலானா மதானி கூறும்போது, "உபி அரசு நடத்தும் ஆய்விற்கு அனைத்து மதரஸாவினர் எதிர்ப்பு தெரிவிக்காமல் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இதுவரை எடுக்கப்பட்ட ஆய்வுகள் மீது எந்த புகார்களும் வராததால் இஸ்லாமியர்கள் இதற்கு ஒத்துழைப்பு நல்க வேண்டும். ஆய்விற்கு பின் நிதிநிலையால் நிலவும் குறைகளை தீர்க்க அரசு முன்வர வேண்டும்’ எனத் தெரிவித்திருந்தார்.

உபியின் பெரும்பாலான இஸ்லாமியர்கள் தங்கள் குழந்தைகளை பொதுக்கல்வி நிலையங்களுக்கு முன்பாக 3 முதல் 6 வயது வரை மதரஸாக்களில் சேர்த்து குர்ஆனை படிக்க வைக்கின்றனர். இதன் பிறகே இதர பள்ளிகளுக்கு அனுப்புகின்றனர். ஆனால், உபியில் அரசு பள்ளிகளின் கல்வி மற்றும் வசதி தரமானதாக இல்லை. எனவே, ஏழை இஸ்லாமியர்கள் தம் குழந்தைகளுக்கு மதரஸாவிலே கல்வியை தொடர வைக்கின்றனர். இவர்களில் பலர் அரசு சலுகைகளுக்காக தன் பள்ளிகளில் தம் பெயர்களை பதிவு செய்து கொண்டு மதரஸாக்களில் கல்வியை தொடர்கின்றனர். இந்த மதரஸாக்களால் அளிக்கப்படும் குறிப்பிட்ட பட்டங்களுக்கு ஏற்றவகையில் அந்த மாணவர்கள், உபியின் அலிகர் இஸ்லாமிய பல்கலைகழகம் உள்ளிட்ட பல தனியார் கல்வி நிலையங்களிலும் இணைந்து உயர்கல்வி பெறும் வசதி உள்ளது.

இதன் காரணமாக அவற்றில் களஆய்வுகள் மிகவும் அவசியம் எனக் கருதப்படுகிறது. இதன் ஆய்வுகளுக்கு தியோபந்தின் தாரூல் உலூம் மதரஸா அளித்துள்ள ஆதரவு அதிக முக்கியத்துவம் பெற்றிருந்தது. இதற்கு ஏற்றவகையில், உபி அரசின் களஆய்வில் அங்கீகாரம் பெறாத பல மதரஸாக்களுக்கு நிதிஉதவி எங்கிருந்து கிடைக்கிறது என்ற தகவல்கள் இல்லை. சுமார் 50 மதரஸாக்கள் வெளிநாடுகளிலிருந்து பெறும் நிதிக்காக மத்திய அரசின் விதிகளை பின்பற்றாமல் சட்டங்களை மீறியிருப்பதும் தெரிந்துள்ளது. இன்னும் சிலவற்றில் மிகக்குறைவான எண்ணிக்கையில் ஆசிரியர்கள், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாமை எனப் பல குறைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

உபியில் பாஜக தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சியில் உள்ளது. இதற்கு முன் ஆட்சிக்கு வந்த முலாயம்சிங் யாதவ், அவரது மகனான அகிலேஷ்சிங் யாதவின் சமாஜ்வாதியும், மாயாவதியின் பகுஜன் சமாஜும் இதுபோல் மதரஸாக்களை ஒழுங்குப்படுத்த முன்வந்ததில்லை. இவற்றின் மீது நடவடிக்கை எடுத்தால் தமக்கு இஸ்லாமியர்கள் வாக்குகள் பறிபோகும் என நம்பியிருந்தனர். எனினும், சிறுபான்மை வாக்குகள் பற்றி கவலைப்படாத பாஜக அரசு அவர்களது நன்மைக்கான நடவடிக்கையிலும் இறங்கியிருப்பது பாராட்டுக்குரியதாகக் கருதப்படுகிறது.

x