தூத்துக்குடியில் 13 பேர் இறப்புக்கு காரணமான அதிகாரிகளின் சொத்து விவரங்களை தாக்கல் செய்ய உத்தரவு


சென்னை: தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கை தேசிய மனித உரிமை ஆணையம் முடித்து வைத்ததை எதிர்த்து மதுரையை சேர்ந்த மனித உரிமை ஆர்வலரான வழக்கறிஞர் ஹென்றி திபேன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், என்.செந்தில்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் ஹென்றிதிபேன் ஆஜராகி, இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்த இடத்தில் இருந்து 7 கிமீ தொலைவில் உள்ள திரேஸ்புரத்தில் ஒருவரை ஐபிஎஸ் அதிகாரி செல்வநாகரத்தினம் தலைமையிலான போலீஸார் சுட்டுக்கொன்றுள்ளனர்.

நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் முன்பாக சாட்சியம் அளித்துள்ள குற்றவியல் நடுவர்கள், கைதானவர்கள் ரத்தக்காயத்துடன் இருந்தனர் என தெரிவித்தனர். அவர்களை அடித்தது யார், இதுதொடர்பாக சிபிஐ அறிக்கையில் எந்த தகவலும் இல்லை என்றார்.

அப்போது சிபிஐ தரப்பில் ஆஜரான சிறப்பு அரசு வழக்கறிஞர் கே.சீனிவாசன், சிபிஐ நடுநிலைமையுடன்தான் அனைத்து வழக்குகளையும் விசாரிக்கிறது. கூடுதல் இறுதி அறிக்கையை மதுரை சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. அந்த வழக்கு விசாரணை ஆக. 2-ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சிபிஐ மீது அபாண்டமாக பழி சுமத்தக்கூடாது என ஆட்சேபம் தெரிவித்தார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ‘‘ தூத்துக்குடியில் பொதுமக்கள் நடத்திய 100 நாள் போராட்டத்தில் எந்தவொரு சட்டம் - ஒழுங்கு பிரச்சினையும் ஏற்படவில்லை. ஆனால் இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ளது. போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களை புழு, பூச்சிபோல நசுக்கிவிடலாம் என நினைத்துள்ளனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து 7 கிமீ தொலைவில் உள்ள திரேஸ்புரத்தில் துப்பாக்கிச்சூடு நடத்த வேண்டிய அவசியம் என்ன, சுதந்திரமான அமைப்பான சிபிஐ 13 அப்பாவிகள் பலியான இந்த வழக்கில் ஒரே ஒரு அதிகாரி மீது மட்டுமே குற்றம் சாட்டியுள்ளது. சிபிஐ இந்த வழக்கை விசாரித்துஎந்த பிரயோஜனமும் இல்லை.இது சிபிஐ-யின் கையாலாகாததனத்தைதான் காட்டுகிறது.

ஆனால் சாத்தான்குளம் சம்பவத்தை சிபிஐ நேர்மையாகவிசாரித்தது. அதற்காக ஒட்டுமொத்த சிபிஐ அதிகாரிகளையும் நாங்கள் குறைகூறவில்லை. தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவமே செல்வாக்குமிக்க நபருக்காகவே நடந்துள்ளது. சம்பவம் நடந்து இத்தனை ஆண்டுகளாகியும் யார் மீதும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கருத்து தெரிவித்தனர்.

பின்னர், இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் நடப்பதற்கு 2 ஆண்டுகள் முன்பும், பின்பும் என இதில் தொடர்புடைய அதிகாரிகளின் நான்காண்டு சொத்து விவரங்களை இரு வார காலத்துக்குள் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை வரும் ஜூலை 29-ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளனர்.

x