அண்ணாமலை படத்துடன் நடுரோட்டில் ஆடு பலியிட்ட சம்பவம்: உயர் நீதிமன்ற நீதிபதிகள் அதிருப்தி


அண்ணாமலை | கோப்புப்படம்

சென்னை: பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் உருவப்படத்தை ஆட்டின் கழுத்தில் மாட்டி, அந்த ஆட்டை நடுரோட்டில் பலியிட்ட சம்பவம் ஏற்க முடியாத ஒன்று என அதிருப்தி தெரிவித்துள்ள உயர் நீதிமன்ற நீதிபதிகள், இதுதொடர்பாக தமிழக அரசு தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளனர்.

மக்களவைத் தேர்தலில் தமிழக பாஜக தலைவரான அண்ணாமலை கோவை தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். இதைக்கொண்டாடும் வகையில் திமுகவினர் அண்ணாமலையின் உருவப்படத்தை ஒரு ஆட்டின் கழுத்தில் மாட்டி அதை நடுரோட்டில் வெட்டி பலியிட்டனர்.

இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி பாஜக வழக்கறிஞரான ஏ.மோகன்தாஸ் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி ஆர். மகாதேவன் மற்றும் நீதிபதி முகமது ஷபீக் ஆகியோர் அடங்கியஅமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜி.எஸ்.மணி, ‘‘இதுபோன்ற கொடூர சம்பவங்களை ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது. இதுதொடர்பாக போலீஸில் புகார் அளித்தும் ஆளுங்கட்சியினருக்கு எதிராக போலீஸார்எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆட்டை பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை போல உருவகப்படுத்தி, அதை நடுரோட்டில் துடிதுடிக்க வெட்டிக் கொன்ற சம்பவம் கிரிமினல் குற்றம் மட்டுமின்றி, விலங்குகள் வதை தடுப்புச்சட்டத்தின் கீழும் குற்றமாகும்.

சம்மந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்காவிட்டால் இதுபோன்ற செயல்கள் தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்திவிடும். அண்ணாமலை மட்டுமின்றி எந்தவொரு அரசியல் கட்சி தலைவர்களின் புகைப்படங்களையும் மாட்டி பலியிடுவதை அனுமதிக்கக்கூடாது என வாதிட்டார்.

திமுகவினரின் இந்த செயலுக்கு அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், இதுதொடர்பாக தமிழக அரசு ஒருவார காலத்துக்குள் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்துள்ளனர்.

x