குரோம்பேட்டை: விடுதலைப் போராட்ட வீரர்என்.சங்கரய்யாவின் 103-வதுபிறந்தநாளான நேற்று குரோம்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த படத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், அமைச்சர் தா.மோ.அன்பரசன், குடும்பத்தினர் உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
விடுதலைப் போராட்ட வீரரும், இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் முன்னோடியுமான என்.சங்கரய்யாவின் 103-வது பிறந்த நாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதனையொட்டி செங்கல்பட்டு மாவட்டம்,குரோம்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த படத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் மலர்தூவி மரியாதை செலுத்தினார். கட்சி நிர்வாகிகளும் பங்கேற்று மரி யாதை செலுத்தினர்.
அப்போது செய்தியாளர்களிடம் கே.பாலகிருஷ்ணன் கூறியதாவது: உழைப்பாளி வர்க்கத்தின் மகத் தான, முதுபெரும் தலைவர் என்.சங்கரய்யாவின் 103-வது பிறந்த நாளில் அவருக்கு செவ்வஞ்சலி செலுத்துகிறோம். அவர் கடைபிடித்த லட்சியத்தை முன்னெடுத்துச் செல்ல எங்களை அர்ப்பணித்துக் கொள்ள உறுதியேற்கும் நிகழ்வாக இந்நாளை கருதுகிறோம் என்றார்.
முன்னதாக அமைச்சர் தா.மோ.அன்பரசன், எம்எல்ஏ இ.கருணாநிதி, தாம்பரம் மாநகராட்சி 2-வதுமண்டலக் குழுத் தலைவர் ஜோசப் அண்ணாதுரை, 28-வது வார்டு உறுப்பினர் ஜி.விஜயலட்சுமி, குடும்பத்தினர் அஞ்சலி செலுத்தினர்.