வால்பாறை: கோவை மாவட்டம் வால்பாறையில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக மலைப்பாதையில் 2 இடங்களில் மண் சரிவு ஏற்பட்டு மரங்கள் விழுந்துள்ளதால் போக்குவரத்து முற்றிலும் முடங்கியுள்ளது.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த வால்பாறை சுற்றுலா தளமாக விளங்குவதோடு, தேயிலை தோட்டங்கள் நிறைந்த பகுதியாகவும் உள்ளது. இங்கு கடந்த ஒரு வார காலத்திற்கும் மேலாக தொடர்ந்து இடைவிடாமல் மழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு இடங்களில் சிறிய அளவில் மண்சரிவுகள் ஏற்பட்டு வந்தது. மண்சரிவு ஏற்படும் வாய்ப்புள்ள இடங்களில் வசிக்கும் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு மாவட்ட நிர்வாகம் சார்பில் எச்சரிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் தொடர் கனமழை காரணமாக வால்பாறையில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் உத்தரவிட்டிருந்தார். தொடர்ந்து மழை பெய்து வந்து நிலையில், இன்று அதிகாலை பொள்ளாச்சியில் இருந்து வால்பாறை செல்லும் மலைப்பாதையில் உள்ள 23 மற்றும் 24வது கொண்டை ஊசி வளைவுகளில் மண்சரிவு ஏற்பட்டு, மரங்கள் விழுந்தன. இதனால் அவ்வழியே போக்குவரத்து முற்றிலும் முடங்கியது. கல்லூரிகள் மற்றும் வேலைகளுக்கு செல்வதற்காக வந்தவர்கள் இதனால் பெரும் சிரமம் அடைந்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் மற்றும் நெடுஞ்சாலைத்துறையினர் சாலையில் உள்ள மண், பாறைகள் மற்றும் மரங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சுமார் 4 மணி நேரத்திற்கும் மேலாக மீட்புப்பணிகள் நடைபெற்று வரும் போதும், இந்த பணிகள் முடிய மேலும் பல மணி நேரம் வரை ஆகலாம் என கூறப்படுகிறது.