‘எமதர்மராஜனையும் போற்ற வேண்டும்’ - தன்வந்திரியை வணங்க உத்தரவிட்ட ம.பி அரசை கிண்டலடிக்கும் காங்கிரஸ்!


இந்திமொழியில் மருத்துவக்கல்வி துவங்கியுள்ள மத்தியப்பிரதேசத்தில் புதிய சர்ச்சை கிளம்பியுள்ளது. அனைத்து கல்லூரிகளிலும் இந்துக்களின் மருத்துவக் கடவுளான தன்வந்திரியை வணங்க வேண்டும் என அமைச்சர் அறிவித்துள்ளார். இதை கிண்டலடிக்கும் விதத்தில், எதிர்கட்சியான காங்கிரஸ், எமதர்மராஜனும் போற்றப்பட வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.

பாஜக ஆளும் மபியில் நாட்டிலேயே முதலாவதாக ஒரு மருத்துவக் கல்லூரியில் இந்திமொழியில் பாடங்கள் துவக்கப்பட்டுள்ளன. எம்பிபிஎஸ் பட்டத்திற்கான மூன்று பாடநூல்களையும் நேற்று முன்தினம் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா போபாலில் வெளியிட்டிருந்தார். இதில் ஆங்கில வார்த்தைகளை மொழிபெயர்க்காமல் அவை இந்தி மொழியிலேயே குறிப்பிட்டிருப்பதாக சர்ச்சைகள் எழுந்தன. இச்சூழலில், அம்மாநிலத்தின் மருத்துவக் கல்வித்துறை அமைச்சரான விஷ்வாஸ் கைலாஷ் சாரங் நேற்று வெளியிட்ட ஒரு புதிய அறிவிப்பும் சர்ச்சையாகி வருகிறது.

மபியின் மருத்துவக்கல்வி அமைச்சரான விஷ்வாஸ் சாரங்கின் அறிக்கையில், ‘இந்து மதநம்பிக்கையின்படி, மருத்துவக் கடவுளான தன்வந்திரி, விஷ்ணுவின் அவதாரமாகக் கருதப்படுகிறார். எனவே, கடவுள் தன்வந்திரியை அனைத்து மருத்துவக் கல்லூரிகள், மருத்துவமனைகளில் அதன் மருத்துவர்கள், மாணவர்கள், நோயாளிகள் மற்றும் அனைவரது குடும்பத்தினரும் வணங்க வேண்டும். இதை தீபாவளி சமயத்தில் அக்டோபர் 22 ல் வரும் தந்தேரேஸ் தினத்தில் செய்யப்பட வேண்டும்’ என அறிவித்துள்ளார்.

இதுபோல், இந்து கடவுள் தன்வந்திரியை ஒவ்வொரு தந்தேரஸ் தினத்திலும் வணங்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வாரம் வரவிருக்கும் இதன் முதல் நிகழ்ச்சியில் இந்தோர் மற்றும் போபாலின் மருத்துவக் கல்லூரியில் மபி அமைச்சர் கைலாஷ் விஷ்வாஸ் கலந்து கொள்ள இருக்கிறார். இவருக்கு பதிலளிக்கும் வகையில் மபியின் எதிர்கட்சியான காங்கிரஸும் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில், மருத்துவத்துறையில் முக்கிய காரணகர்த்தாவான எமதர்மராஜரையும் வணங்க வலியுறுத்தி உள்ளனர்.

இது குறித்து ‘காமதேனு’ இணையத்திடம் ம.பியின் காங்கிரஸ் செய்தித்தொடர்பாளரும் மாநிலத் துணைத்தலைவருமான பூபேந்திர குப்தா கூறும்போது, ‘இந்த விவகாரத்தில் கூடுதல் தகவல்களை அறிய அமைச்சர் சாரங், மூத்த பண்டிதர்களிடம் ஆலோசனை நடத்த வேண்டும். இந்துக்களின் நம்பிக்கையின்படி தந்தேரஸ் அன்று எமதரமராஜரும் வணங்கப்பட வேண்டும் என்பதையும் அமலாக்க வலியுறுத்தி உள்ளோம். ஏனெனில், இதுபோன்ற அலங்கார அறிவிப்புகளை தவிர்த்து மபி அரசு மக்களின் மருத்துவ நலன்களில் அக்கறை கொள்ள வேண்டும்.’ எனக் குறிப்பிட்டார்.

இதனிடையே, இந்தி மொழியில் எம்பிபிஎஸ் கற்பிக்க மருத்துவர்கள் இடையே இருவேறு விதமான கருத்துக்கள் வெளியானபடி உள்ளன. மபி அரசின் முயற்சியை முற்போக்கு மருத்துவ பேராசிரியர்கள் சங்கத்தினர் வரவேற்றுள்ளனர். மருத்துவர்கள் சங்கக் கூட்டமைப்பினர், இந்திமொழி எம்பிபிஎஸ் மாணவர்களுக்கு பின்னடைவை ஏற்படுத்தும் எனக் குறிப்பிட்டுள்ளனர். முதுநிலை பட்டத்தின் போது ஆங்கிலத்தில் சொற்பொழிவாற்றினால் தான் உள்நாடு, வெளிநாடுகளில் பணியாற்ற முடியும் எனவும் தெரிவித்துள்ளனர்.

இச்சுழலில், முதல்வர் சிவராஜ்சிங் சவுகான், முதல்கட்டமாக மபியின் தலா 6 பாலிடெக்னிக் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் இந்திமொழியில் பாடப்பிவு துவக்கப்படுவதாக குறிப்பிட்டவர், தன் மாநிலத்தின் ஐஐடி, ஐஐஎம் கல்வி நிலையங்களிலும் இந்திமொழியில் பாடம் போதிப்பதே தம் அரசின் கனவு என்றும் குறிப்பிட்டுள்ளார்.

x