காவிரியில் நீர் திறக்காத கர்நாடக அரசு - நாகை விவசாயிகள் கழுத்தில் தூக்கு மாட்டி போராட்டம்


நாகப்பட்டினம்: காவிரியில் தமிழகத்திற்கான நீரைத் திறந்து விட மறுக்கும் கர்நாடக அரசையும், உரிய நீரை கேட்டுப் பெறாத தமிழக அரசையும், இதற்கு அழுத்தம் கொடுக்காத மத்திய அரசையும் கண்டித்து நாகப்பட்டினத்தில் காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் கழுத்தில் தூக்கு கயிறு மாட்டி நூதனப் போராட்டம் நடத்தினர்.

காவிரியில் இருந்து தமிழகத்திற்கு முறைப்படி வழங்க வேண்டிய நீரை வழங்காமல் கர்நாடக அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது. காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி ஒழுங்காற்றுக் குழு ஆகியவை உத்தரவிட்டாலும் கூட அதையும் மதிக்காமல் கர்நாடக அரசு தொடர்ந்து அலட்சியம் காட்டி வருகிறது.

அண்மையில் கூடிய காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழ்நாட்டுக்கு தினசரி காவிரியில் ஒரு டிஎம்சி நீர் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டும் கூட அதையும் கர்நாடக அரசு ஏற்கவில்லை. இதனால் கொதித்துப் போய் உள்ள தமிழக விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தநிலையில், காவிரியில் நீர் திறக்க மறுக்கும் கர்நாடக அரசை கண்டித்து கழுத்தில் தூக்கு கயிற்றை மாட்டிக் கொண்டு விவசாயிகள் நாகை அவுரித் திடலில் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் மற்றும் தமிழக விவசாயிகள் கூட்டியக்கம் ஆகியவற்றின் சார்பில் அதன் தலைவர் தனபாலன் தலைமையில் இந்தப் போராட்டம் நடைபெற்றது.

இதில் பங்கேற்ற விவசாயிகள் தங்கள் கழுத்தில் தூக்குக் கயிற்றை மாட்டிக் கொண்டு, காவிரியில் நீரைத் திறந்து தங்களை வாழ விடுங்கள் அல்லது சாக விடுங்கள் என்று முழக்கம் எழுப்பினர். இது குறித்து பேசிய தனபாலன், “கர்நாடகத்தில் உள்ள நீரில் மூன்றில் ஒரு பங்கு நீரை தமிழகத்திற்கு திறந்து விட வேண்டும் என்பது விதி. தற்போது கர்நாடக அணைகளில் 73 சதவீதம் நீர் இருப்பதாக அந்த மாநில அரசு தெரிவித்துள்ளது. ஆனால், தமிழகத்திற்கு உரிய நீரைத் திறந்து விட மறுக்கிறது கர்நாடகா. காவிரி மேலாண்மை ஆணையம் 96 முறை கூடியும் அது பிறப்பித்த எந்த உத்தரவையும் கர்நாடக அரசு மதித்து செயல்படவில்லை.” என்றார்.

மேலும், “கர்நாடகத்தில் நீரைப் பெறுவதற்கு உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு முறையிட வேண்டும் என்று வலியுறுத்தியும், கர்நாடக அரசு உடனடியாக தண்ணீரை திறந்து விடக்கோரியும், இதற்கு மத்திய அரசு உரிய அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் இந்தப் போராட்டத்தை நடத்தியிருக்கிறோம். இதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் இன்னும் பத்து நாட்களில் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடைபெறும்" என்று அவர் கூறினார்

x