ஊட்டி மலை ரயிலுக்கு யுனெஸ்கோ அங்கீகாரம் கிடைத்து 19 ஆண்டுகள் - இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்!


நீலகிரி: ஊட்டி மலை ரயிலுக்கு யுனெஸ்கோ பாரம்பரிய அந்தஸ்து கிடைத்து 19 ஆண்டுகள் நிறைவுற்று, 20-ம் ஆண்டு தொடங்குவதையொட்டி குன்னூரில் சுற்றுலாப் பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. அதோடு, மலை ரயிலின் சிறப்புகள் குறித்த துண்டுப் பிரசுரங்களும் வழங்கப்பட்டன.

நீலகிரி மலைப்பகுதியில் பழமை வாய்ந்த மலை ரயில் நூற்றாண்டை கடந்து சிறப்பாக இயங்கி வருகிறது. இந்த மலை ரயிலில் பயணம் செய்ய தமிழகம் மட்டுமின்றி சர்வதேச சுற்றுலாப் பயணிகளும் அதிகம் ஆர்வம் கட்டி வருகின்றனர். இத்தகைய சிறப்பு பெற்ற மலை ரயிலுக்கு கடந்த 2005-ம் ஆண்டு ஜூலை 15-ம் தேதி யுனெஸ்கோ சார்பில் பாரம்பரிய அந்தஸ்து வழங்கப்பட்டது.

இந்நிலையில், பாரம்பரிய அந்தஸ்து கிடைத்து இன்றுடன் 19 ஆண்டுகள் நிறைவுற்றுள்ளதால் குன்னூரில் உள்ள ரயில் நிலையத்தில் மலை ரயில் அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் மலை ரயில் ஆர்வலர்கள் சார்பில் சுற்றுலாப் பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.

மேலும், மலை ரயிலின் சிறப்புகள் குறித்த துண்டு பிரசுரமும் சுற்றுலாப் பயணிகளுக்கு வழங்கப்பட்டது. தொடர்ந்து, தோடர் பழங்குடியினப் பெண்கள் மலை ரயில் குறித்து தோடர் மொழியில் பாடல் பாடி சுற்றுலாப் பயணிகளை மகிழ்வித்தனர்.

x