அகற்றப்பட்ட மறைமலை அடிகளார் சிலை - நாகையில் புதிய இடத்தில் மீண்டும் நிறுவப்பட்டது


நாகை: அகற்றப்பட்ட மறைமலை அடிகளார் சிலை, புதிய இடத்தில் மீண்டும் நிறுவப்பட்டு திறக்கப்பட்டுள்ளது. நாகை ரயில் நிலையம் எதிரில் இருந்த மறைமலை அடிகளாரின் சிலை சாலை விரிவாக்கம் மற்றும் மேம்பாலம் பணிகள் காரணமாக அங்கிருந்து அகற்றப்பட்டு வெளிப்பாளையம் தம்பிதுரை பூங்காவில் நிறுவப்பட்டு இன்று திறக்கப்பட்டது.

தனித்தமிழ் இயக்கத் தந்தை என போற்றப்படும் மறைந்த மறைமலை அடிகளார் நாகப்பட்டினம் காடம்பாடியில் பிறந்தவர். அவரது தனித் தமிழ் இயக்கம் காரணமாக, தமிழ் மொழியில் பிறமொழி கலப்பு பெரிதும் மட்டுப்படுத்தப்பட்டது. அவருக்கு சிறப்புச் செய்யும் விதமாக நாகையில் அவருக்கு சிலை அமைக்கப்பட்டது.

கடந்த 19-06-1969-ம் ஆண்டு நாகப்பட்டினம் ரயில் நிலையம் அருகே மணிக்கூண்டு பகுதியில் நாகை தமிழ்ச் சங்கம் சார்பில் மறைமலை அடிகளாரின் திருவுருவச் சிலை அமைக்கப்பட்டது. இதை அப்போதைய முதல்வர் கருணாநிதி முன்னிலையில் குன்றக்குடி அடிகளார் திறந்து வைத்தார்.

தற்போது அந்தப் பகுதியில் ரயில்வே மேம்பாலம் கட்டும் பணிகள் தொடங்க உள்ளதால் மறைமலை அடிகளார் சிலையை இடமாற்றம் செய்ய நகராட்சி சார்பில் முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து வெளிப்பாளையம் தம்பித்துரை பூங்காவில் மறைமலை அடிகள் சிலை பழமை மாறாமல் நிறுவப்பட்டது.

மறைமலை அடிகளாரின் 148-ம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு புதுப்பிக்கப்பட்ட அவரது திருவுருவச் சிலையை நகராட்சி தலைவர் மாரிமுத்து தலைமையில் மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் இன்று திறந்து வைத்தார். தமிழக மீன் வளர்ச்சிக் கழகத்தின் தலைவர் கௌதமன் அதற்கான கல்வெட்டை திறந்து வைத்து சிலைக்கு மாலை அணிவித்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தினர்.

இவ்விழாவில் மறைமலை அடிகளாரின் மகன் பச்சையப்பன் தனது மனைவி உள்ளிட்ட குடும்பத்தாருடன் கலந்து கொண்டார். அவருக்கு மாவட்ட நிர்வாகம் மற்றும் நகராட்சி சார்பில் மரியாதை செய்யப்பட்டது. சிலை திறப்பு நிகழ்வில் ஏராளமான தமிழ் அறிஞர்கள், நகர்மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

x