தஞ்சாவூர் மாவட்டத்தில் கிராமப்புறங்களில் உள்ள 141 அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவு திட்டத்தை காமராஜர் பிறந்த நாளான இன்று காலை மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் தொடங்கி வைத்தார்.
அதன்படி தஞ்சாவூர் அருகே திருக்கானூர் பட்டியில் உள்ள புனித மரியன்னை தொடக்கப்பள்ளியில் இத்திட்டத்தை மாவட்ட ஆட்சியர் குத்துவிளக்கேற்றி வைத்து தொடங்கி வைத்தார். பின்னர் மாணவர்களுக்கு புத்தகப்பை மற்றும் எழுது பொருட்களை வழங்கி அவர்களுடன் அமர்ந்து காலை உணவு அருந்தினார்.
இதில் எம்எல்ஏ-க்கள் துரை.சந்திரசேகரன், டி.கே.ஜி. நீலமேகம், தஞ்சாவூர் மேயர் சண்.ராமநாதன் மற்றும் பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள், ஊரக வளர்ச்சித் துறையினர், வருவாய்த்துறையினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்தத் திட்டத்தின்படி தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 141 அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் 10,870 குழந்தைகளுக்கு இன்று காலை உணவு வழங்கப்பட்டது. இனிமேல் இத்திட்டத்தின்படி திங்கள்கிழமை சேமியா உப்புமா, செவ்வாய் கிழமை ரவா - காய்கறி கிச்சடி, புதன்கிழமை வெண் பொங்கல், வியாழக்கிழமை அரிசி உப்புமா, வெள்ளிக்கிழமை கோதுமை ரவா சாம்பாருடன் சேர்த்து வழங்கப்பட உள்ளது.