லோன் ஆப் மூலம் கடன் வாங்கி அதனைச் செலுத்த தவறிய பாஜக பிரமுகரை பெண் நிர்வாகியின் புகைப்படத்துடன் ஆபாசமாக சித்தரித்த நிறுவனம் மீது போலீஸில் புகார் செய்யப்பட்டுள்ளது.
சென்னை விருகம்பாக்கம் கிருஷ்ணாநகரைச் சேர்ந்தவர் டெல்லி கோபி(43). பாஜக முன்னாள் மத்திய சென்னை கிழக்கு மாவட்ட ஊரக மற்றும் நகர்ப்புற வளர்ச்சி தலைவரான டெல்லி கோபி தற்போது தனியார் பைனான்ஸ் கம்பெனியில் கன்சல்டன்டாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் டெல்லி கோபி பல்வேறு லோன் ஆப் மூலம் கடன் பெற்று அதனைத் தவறாமல் கட்டிவந்துள்ளார்.
இதே போல் அவர் கடந்த 4-ம் தேதி deck loan, slog loan என்ற ஆன்லைன் ஆப் லோன் மூலமாக ஐந்தாயிரம் ரூபாய் கடன் பெற்றுள்ளார். நேற்றுடன் பணம் கட்டுவதற்கான காலக்கெடு முடிவடைந்துவிட்டது. ஒரு நாள் காலதாமதம் ஆனதால் லோன் ஆப் நிறுவனம் கோபி செல்போனை ஹேக் செய்து பாஜகவில் முக்கிய பொறுப்பு வகிக்கும் நபர்களுடன் கோபியின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து அவரது செல்போனில் இருந்த எண்களுக்கு அனுப்பியுள்ளது.
மேலும் கோபி ஒரு தேடப்படும் கற்பழிப்பு குற்றவாளி எனவும், குறிப்பாக பாஜகவின் உயர் பொறுப்பில் இருக்கும் பெண்ணின் புகைப்படத்துடன், கோபியின் புகைப்படத்தையும் ஒன்றாக இணைத்து ஆபாசமாக சித்தரித்து அனுப்பியுள்ளனர். இதனைக் கண்டு அதிர்ந்து போன டெல்லி கோபி, விருகம்பாக்கம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதன் அடிப்படையில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பாஜகவின் முக்கிய பிரமுகர்கள் படங்களை ஆபாசமாக சித்தரித்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானதால் அதிர்ச்சியடைந்த பாஜகவினர் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது காவல்துறை உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.