திருமாவளவன், சீமான் நாக்கை அறுப்பேன் என மிரட்டிய மதுரை மாவட்ட பாஜக தலைவரை கைது செய்யத் தடை!


இந்து மதத்துக்கு எதிராக பேசுபவர்களின் நாக்கை அறுக்க அஞ்சமாட்டோம் என பேசிய பாஜக தலைவரை வரும் 17-ம் தேதி வரை கைது செய்யக்கூடாது என உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரை மாவட்ட பாஜக தலைவர் மகா சுசீந்திரன் தலைமையில் பாஜகவினர் உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வரும் மேகாலயா ஆளுநர் இல.கணேசன் உடல் நலம் பெற வேண்டி மதுரை கோயிலில் சிறப்பு பூஜை நடத்தினர். அப்போது மகா சுசீந்திரன் செய்தியாளர்களிடம் பேசும்போது, ‘இந்து மதத்துக்கு எதிராக பேசும் திருமாவளவன், சீமான், திருமுருகன் காந்தி, ஆ.ராசா போன்றவர்கள் நித்யானந்தா போல் தனிநாடு தொடங்கி கருத்து தெரிவிக்கலாம். இந்து மக்களையும், இந்து தேசத்தையும் பிரிக்கும் தீய சக்திகளின் நாக்கை வெட்டுவதற்கு அஞ்ச மாட்டோம்’ என்றார்.

இதையடுத்து மகா சுசீந்திரன் மீது சிலைமான் போலீஸார் பல்வேறு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் முன்ஜாமீன் கேட்டு மகா சுசீந்திரன் உயர் நீதிமன்ற கிளையில் மனுத்தாக்கல் செய்தார். மனுவை நீதிபதி நக்கீரன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், தேவர் ஜெயந்தியை முன்னிட்டு பசும்பொன்னிற்கு பிரதமர் மோடி வருவதற்கு வாய்ப்புள்ளது. அந்த நிகழ்வில் மனுதாரர் பங்கேற்க வேண்டும். இதனால் அதுவரை மனுதாரரை கைது செய்யக்கூடாது என போலீஸாருக்கு உத்தரவிட வேண்டும் எனக் கூறப்பட்டது.

அரசு தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஆஜராக கால அவகாசம் கோரப்பட்டது. இதையடுத்து வழக்கு விசாரணையை வரும் 17-ம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதி, அதுவரை மகா சுசீந்திரனை கைது செய்ய தடை விதித்து உத்தரவிட்டார்.

x