திருவள்ளூர்: “அரசுக்கு எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை. குழந்தைகள் பள்ளிக்கு பசியுடன் வரக்கூடாது” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் காலை உணவுத் திட்டத்தை விரிவுபடுத்துவதற்காக கடந்த பட்ஜெட்டின் போது தமிழ்நாடு அரசு அறிவித்தது. அதன்படி இத்திட்டம் திருவள்ளூரில் இன்று தொடங்கி வைக்கப்பட்டது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று அரசு உதவி பெறும் பள்ளியில் காலை உணவுத் திட்டத்தை துவக்கி வைத்தார். காலை உணவு வகைகளின் தரத்தை ஆய்வு செய்த அவர், பின்னர் மாணவிகளுடன் அமர்ந்து உணவருந்தினார்.
இதைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ”காலை உணவு திட்டம் மூலம் பெற்றோரின் பொருளாதார சுமையை அரசு குறைத்துள்ளது. இத்திட்டம் அரசுக்கு செலவு இல்லை. எதிர்கால தலைமுறையை உருவாக்குவதற்கான முதலீடு. இத்திட்டத்தின் மூலம் 20.73 லட்சத்திற்கும் அதிகமான குழந்தைகள் சத்தான உணவை சாப்பிடுகிறார்கள்” என்றார்.
மேலும், “குழந்தைகள் பசியைப் போக்க கொண்டு வந்த திட்டம் தான் முதலமைச்சரின் காலை உணவு திட்டம். அரசுக்கு எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை. பள்ளிக்கு, மாணவர்கள் பசியுடன் வரக்கூடாது. எமர்ஜென்சி குறித்து நாடாளுமன்றத்தில் இப்போது கேள்வி எழுப்பும் பாஜக அரசு, அந்த நேரத்தில் பொதுப் பட்டியலுக்கு மாற்றப்பட்ட கல்வித்துறையை, மாநில பட்டியலுக்கு மாற்ற தயாராக இருக்கிறதா?” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “காலை உணவு திட்டத்தின் தரம் ஒரு துளி கூட குறையக்கூடாது. அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் அடிக்கடி இத்திட்டம் குறித்து திடீர் ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டும்” என்றார்.