திருவள்ளூர்: வயிற்று வலியால் அவதியுற்ற இரு பெண்களின் சினைப்பை மற்றும் கர்ப்பப் பையில் இருந்த 4.5 கிலோ மற்றும் 3.5 கிலோ கட்டிகளை திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவர்கள் அகற்றி சாதனை புரிந்துள்ளனர்.
திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தினமும் சுமார் 2 ஆயிரம் புறநோயாளிகளும், 500 உள் நோயாளிகளும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த மருத்துவமனையில், வயிற்று வலியால் அவதியுற்ற 2 பெண்களுக்கு சினைப்பை மற்றும் கர்ப்பப் பையில் இருந்த 4.5 கிலோ மற்றும் 3.5 கிலோ கட்டிகளை அகற்றி மருத்துவர்கள் சாதனை புரிந்துள்ளனர்.
இதுகுறித்து, திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் மகப்பேறு மற்றும் பெண்கள் நோயியல் துறை தலைமை பேராசிரியரான டாக்டர் பாத்திமா ஹசன் தெரிவித்ததாவது:
வயிற்று வலியால் அவதி: திருவள்ளூர் அருகே உள்ள எறையூர் பகுதியைச் சேர்ந்தவர் அபிதா (55). ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவர் லட்சுமி(42). இவர்கள் இருவரும் நீண்ட நாட்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தனர். இதனால், திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வந்த அபிதா, லட்சுமி ஆகியோரை மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்திய போது, அபிதாவின் சினைப்பையில் 4.5 கிலோ கட்டி இருந்ததும், லட்சுமியின் கர்ப்பப் பையில் 3.5 கிலோ கட்டி இருந்ததும் கண்டறியப்பட்டது.
இதையடுத்து, அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் ரேவதியின் ஊக்குவிப்பு மற்றும் மருத்துவமனை கண்காணிப்பாளர் சுரேஷ் பாபுஒத்துழைப்புடன் எனது தலைமையில், மயக்கவியல் துறை தலைமை மருத்துவர் சரவணகுமார், மயக்கவியல் மருத்துவர்கள் செல்வம், சுபாஷ் சரவணன், சிறுநீரக மருத்துவர் ஆனந்த், மகப்பேறு மற்றும் பெண்கள் நோயியல் துறைஇணைப் பேராசிரியர் பத்மலதா, மருத்துவர்கள் கீர்த்தனா, பிரவலிக்கா, ரிஸ்வானா ஆகியோர் அடங்கிய மருத்துவக் குழுவினர், அபிதா மற்றும் லட்சுமியின் வயிற்றில் இருந்த கட்டிகளை அறுவை சிகிச்சை மூலம் சமீபத்தில் அகற்றினர்.
இதுவே முதல்முறை: இதுவரை, இதுபோன்ற பிரச்சினை உள்ள நோயாளிகள் சென்னைஅரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. தற்போது திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அதிநவீன கருவிகள், அறுவை சிகிச்சை அரங்குகள் உள்ளிட்ட வசதிகள் இருப்பதால், முதல்முறையாக இந்த பெரிய அளவிலான கட்டிகள் அகற்றப்பட்டுள்ளன.
லேப்ராஸ்கோபிக் சிகிச்சை: இதேபோல, ராணிப்பேட்டையை சேர்ந்த பாரதி (47), திருவள்ளூரைச் சேர்ந்த லலிதா (43) ஆகிய பெண்களுக்கும் கர்ப்பப்பையில் கட்டிகள் இருந்தது மருத்துவப் பரிசோதனையில் தெரிய வந்தது. இதையடுத்து, அவர்களுக்கு லேப்ராஸ்கோபிக் அறுவை சிகிச்சை மூலம் கர்ப்பப் பைகள் அகற்றப்பட்டுள்ளன.
திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், லேப்ராஸ்கோபிக் அறுவை சிகிச்சை மூலம் கர்ப்பப்பை அகற்றப்பட்டுள்ளதும் இதுவே முதல் முறை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.