கொடைக்கானல்: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு நேற்று காலை அதிக எண்ணிக்கையிலான வாகனங்களில் சுற்றுலாப் பயணிகள் வருகை தந்தனர். இதனால், நேற்று காலை முதலே நகரின் பல்வேறு பகுதிகள் மற்றும் சுற்றுலாத் தலங்களில் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது.
நேற்று காலை கொடைக்கானலின் நுழைவுப் பகுதியான வெள்ளி நீர்வீழ்ச்சி முதல் ஏரிச் சாலை வரை வாகனங்கள் ஊர்ந்தபடி சென்றன. இதற்கு இடைப்பட்ட பகுதியான சீனிவாசபுரம் முதல் மூஞ்சிக்கல் வரை வாகனங்கள் நகராமல், அரை மணி நேரத்துக்கும் மேலாகக் காத்திருந்தன.
இதனால் சுற்றுலாப் பயணிகள் காருக்குள்ளேயே முடங்கும் நிலைஏற்பட்டது. சீனிவாசபுரத்தில் இருந்து பேருந்து நிலையம் வரையிலான 4 கி.மீ. தொலைவைக் கடக்க ஒரு மணி நேரத்துக்கும் மேலானது.
போக்குவரத்தை ஒழுங்குபடுத்த போதிய போலீஸார் பணியில் அமர்த்தப்படவில்லை. அதேபோல, ஏரிச் சாலையில் போதியபோலீஸார் இல்லாததால் போக்குவரத்தைச் சீரமைப்பதில் தாமதம் ஏற்பட்டது.
வார விடுமுறை நாட்களில் கூடுதல் போலீஸாரை கொடைக்கான லுக்கு அனுப்பி, போக்குவரத்தை சரிசெய்யும் பணியில் ஈடுபடச் செய்ய வேண்டும் என உள்ளூர் தன்னார்வலர்கள், சுற்றுலாப் பயணிகள் பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை இல்லை.
கொடைக்கானலில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலுக்குத் தீர்வுகாண முதல்கட்டமாக சாலையோரம் வாகனங்கள் நிறுத்தப்படுவதைக் கட்டுப்படுத்த வேண்டும். பிரதான சாலைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். கொடைக்கானலில் பல்லடுக்கு வாகன நிறுத்தத்தை அமைக்க வேண்டும்.
இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டால்தான் கொடைக் கானலில் போக்குவரத்து நெரிசலுக் குத் நிரந்தரத் தீர்வுகாண முடியும் என்று சுற்றுலா ஆர்வலர்கள் தெரிவித்தனர்.