யூடிஎஸ் செயலி மூலம் முன்பதிவு இல்லாத ரயில் பயணச்சீட்டு விற்பனை 2 மடங்காக அதிகரிப்பு!


மதுரை: யூடிஎஸ் செயலி மூலம் முன்பதில் இலலாத ரயில் பயணச்சீட்டு மூலம் பயணம் செய்வோரின் எண்ணிக்கை 53,000 ஆக உயர்ந்துள்ளது.

இதுகுறித்து மதுரை கோட்ட ரயில்வே நிர்வாகம் தரப்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ரயில்களில் பயணம் செய்ய முன்பதிவு இன்றி பயணச் சீட்டுகள் ரயில் நிலைய பதிவு அலுவலகங்களில் வழங்கப்பட்டன. இதற்காக பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருப்பதை தவிர்க்க, பயணச்சீட்டு பெற தானியங்கி இயந்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. பிறகு மொபைல் போனிலேயே பயணச்சீட்டு பதிவு செய்யும் முறை அமுலுக்கு வந்தது. காகிதமின்றி பயணச்சீட்டு பதிவு செய்யும் இந்த முறை சுற்றுச்சூழல் பாதுகாப்பை உறுதி செய்வதாக பாராட்டு பெற்றது.

பயணிகளின் வசதிக்கென மதுரைக் கோட்டத்திலுள்ள அனைத்து ரயில் நிலையங்களிலும் மொபைல் போன் மூலம் முன்பதிவு இல்லாத பயணச் சீட்டு பதியும் முறை அறிமுகம் செய்யப்பட்டது. இப்புதிய திட்டத்தை பற்றி விளக்கி கூறவும், பிரச்சாரம் செய்யவும் மூத்த ஊழியர்கள் அடங்கிய குழுக்கள் அமைக்கப்பட்டன. அவர்களும் பயணிகளுக்கு இதுகுறித்து விளக்கி கூறினர். கடந்தாண்டு அக்டோபர் முதல் சுமார் 26,000 பயணிகள் மொபைல் போன் பயணச் சீட்டுகள் மூலம் பயணம் செய்தனர்.

தீவிர பிரச்சாரத்தால் இந்த எண்ணிக்கை கடந்த ஏப்ரல் மாதம் 53,000 ஆக உயர்ந்தது. இந்த சாதனையை எட்ட காரணமாக இருந்த ஊழியர்களுக்கு மதுரை கோட்ட முதுநிலை வர்த்தக மேலாளர் டி. எல். கணேஷ் ரொக்கப் பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார். உதவி கோட்ட வர்த்தக மேலாளர்கள் பாலமுருகன், மணிவண்ணன் ஆகியோரும் உடன் இருந்தனர்.

‘யூடிஎஸ்’ மொபைல் செயலியில் புதிய வசதிகள் அறிமுகம்: செயலியில் மொபைல் எண்ணை உள்ளீடு செய்து ஓடிபி எண் பெற்று, உள்ளே நுழையலாம். இதனால் பாஸ்வேர்டு என்ற சங்கேத வார்த்தையை ஞாபகம் வைத்திருக்க வேண்டியதில்லை. ரயில் நிலையத்தில் இருந்து 15 மீட்டர் தூரத்திற்கு அப்பால் வீட்டிலிருந்தபடியே எந்த ஒரு ரயில் நிலையத்திலிருந்தும் எந்த ஒரு ரயில் நிலையத்திற்கும் பயணச்சீட்டு பதிவு செய்யலாம்.

இருப்பினும், அந்தப் பயணச்சீட்டை பதிவு செய்த நேரத்தில் இருந்து மூன்று மணி நேரத்திற்குள் அல்லது பயணம் துவங்கும் நிலையத்தில் இருந்து புறப்படும் முதல் ரயில் ஆகியவற்றில் மட்டுமே பயன்படுத்த முடியும். முன்பு 5 கிலோ மீட்டர் சுற்றளவிலுள்ள ரயில் நிலையங்களில் இருந்து மட்டுமே பயணச்சீட்டு பதிவு செய்யும் வசதி இருந்தது.

ரயில் நிலையத்திற்குள் வந்து விட்டால், 'க்யூ ஆர்' கோடு பயன்படுத்தியும் பயணச் சீட்டு பதிவு செய்யலாம். இந்த புதிய வசதியால் பயணிகள் மொபைல் போனில் எளிதாக பயணச் சீட்டு பதிவு செய்து கொள்ளலாம். இதன் மூலம் மொபைல்போன் பயணச்சீட்டு மூலம் பயணம் செய்வோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது” இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.