ஆசனூர் அருகே பலத்த மழை: தமிழகம் - கர்நாடகா இடையே போக்குவரத்து பாதிப்பு


பலத்த காற்றுடன் மழை பெய்ததால், திம்பம் - ஆசனூர் இடையே தேசிய நெடுஞ்சாலையில் விழுந்த மூங்கில் மரங்கள் சாலையை மறைத்துள்ளன. (அடுத்த படம்) போக்குவரத்து தடையால் சாலையில் காத்திருக்கும் வாகனங்கள்.

ஈரோடு: தமிழகம் - கர்நாடகாவை இணைக்கும் திம்பம் சாலையில் ஆசனூர் அருகே பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதனால், சாலையோரம் இருந்த மூங்கில் மரங்கள் சாய்ந்ததில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதி வழியாக, திம்பம், ஆசனூர் வழியாக மைசூரு செல்லும் தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. தமிழக - கர்நாடக மாநிலங்களை இணைக்கும் இந்த சாலையில், அரசு பேருந்து, சரக்கு வாகனங்கள் உள்ளிட்ட ஏராளமான வாகனங்கள் பயணிக்கின்றன. தாளவாடி, ஆசனூர் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, சாலையோரத்தில் உள்ள மூங்கில் மரங்கள் சாலையில் விழும் சம்பவங்கள் நடந்து வருகின்றன.

இந்நிலையில், நேற்று மாலை, இப்பகுதியில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதனால், திம்பம் - ஆசனூர் இடையே தேசிய நெடுஞ்சாலையில் 3 இடங்களில் மூங்கில் மரங்கள் சாலையில் சாய்ந்து விழுந்தன. இதனால், பாதை முழுமையாக தடைபட்டது. வாகனங்கள் செல்ல முடியாமல், இரு புறங்களிலும் நீண்ட வரிசையில் காத்திருந்தன. இதையடுத்து, தீயணைப்பு மீட்பு துறையினர், வனத்துறையினர், வாகன ஓட்டிகள் உதவியுடன், மூங்கில் மரங்களை அகற்றினர்.

இதையடுத்து, தமிழகம் - கர்நாடகா இடையே இரண்டரை மணி நேரமாக பாதிக்கப்பட்டு இருந்த போக்குவரத்து சீரானது. ஆசனூர் முதல் திம்பம் வரை தேசிய நெடுஞ்சாலையோரம் காய்ந்த நிலையில் உள்ள மூங்கில் மரங்களையும், தாளவாடி முதல் தலமலை வரை சாலையோரம் காய்ந்த நிலையில் உள்ள மரங்களையும் வனத்துறையினர் அகற்றி, போக்குவரத்து தடைபடாமல் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.