மதுரையில் ஒரு கிலோ தக்காளி ரூ.60க்கு விற்பனை: பொதுமக்கள் கவலை 


மதுரை: மதுரையில் ஒரு கிலோ தக்காளி, ரூ.60 வரை விற்பனையாகி வருவதால் பொதுமக்கள் கவலையடைந்துள்ளனர்.

மதுரை மாட்டுத்தாவணி ஒருங்கிணைந்த காய்கறி சந்தைக்கு, ஆந்திரா, கர்நாடகா மற்றும் தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்து தக்காளி விற்பனைக்கு வருகிறது. தக்காளி விலை சமீப காலமாக நிலையற்று இருந்து வருகிறது. மழைக்காலத்தில் விலை அதிகரிப்பதும், விளைச்சல் அதிகமாக இருக்கும்போது விலை வீழ்ச்சியடைவதுமாக விவசாயிகள், தக்காளி சாகுபடியில் பல்வேறு நஷ்டங்களை சந்தித்து வருகிறார்கள். கடந்த சில மாதமாக கிலோ ரூ.10 முதல் ரூ.20 வரை தக்காளி விலை கட்டுக்குள் இருந்தநிலையில் தற்போது மீண்டும் அதிகரிக்கத்தொடங்கி உள்ளது.

இன்று மாட்டுத்தாவணி ஒருங்கிணைந்த காய்கறி சந்தையில் ஒரு கிலா தக்காளி ரூ.40 முதல் ரூ.60 வரை விற்பனையானது. தக்காளி மொத்தவிலையில் 15 கிலோ உள்ள பெட்டியின் விலை ரூ.400 முதல் ரூ.750 வரையில் விற்பனையானது. தக்காளி அன்றாட சமையலில் முக்கியமாக பயன்படுத்தப்படுகிறது. அதனால், தக்காளி விலை ஏற்றத்தால் பொதுமக்கள் கவலையடைந்துள்ளனர். தக்காளியுடன் பிற காய்கறிகள் விலையும் அதிகரித்துள்ளது.

பீட்ரூட் ரூ.30 முதல் ரூ.50, கேரட் ரூ.20 முதல் ரூ.50, உருளைக்கிழங்கு ரூ.40 முதல் ரூ.60, பாவைக்காய் சிறியது ரூ.120, கருணைக்கிழங்கு ரூ.40, சேப்பைக்கிழங்கு ரூ.70, பீன்ஸ் ரூ.100 முதல் ரூ.180, கத்திரிக்காய் ரூ.50 முதல் ரூ.60, அவரைக்காய் ரூ.60 முதல் ரூ.70, சின்னவெங்காயம் ரூ.40 முதல் ரூ.50, பெரிய வெங்காயம் ரூ.25 ரூ.40 வரை விற்பனையாகிறது.

x