விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பணியின் போது உயிரிழந்த காவலர் குடும்பத்துக்கு சக காவலர்கள் திரட்டிய ரூ.28.66 லட்சம் நிதி உதவி வழங்கப்பட்டது.
சாத்தூர் அருகே உள்ள வனமூர்த்திலிங்கபுரத்தைச் சேர்ந்தவர் முத்துப்பாண்டி (41). கடந்த 2003-ம் ஆண்டு காவலராக பணியில் சேர்ந்த இவர், வெம்பக்கோட்டை காவல் நிலையத்தில் பணியாற்றி வந்தார். கடந்த சில நாள்களுக்கு முன் உடல்நலக் குறைவு ஏற்பட்டு உயிரிழந்தார்.
இந்நிலையில் 2003-ம் ஆண்டு பணியில் சேர்ந்த காவலர்கள் ஒருங்கிணைந்து உதவும் கரங்கள் என்று குழு அமைத்து உயிரிழந்த முத்துப்பாண்டி குடும்பத்தினருக்கு உதவும் வகையில் நிதி திரட்டினர்.
அதன் மூலம் கிடைத்த ரூ.28.66 லட்சத்தை காப்பீட்டு நிறுவனத்தில் வைப்புத் தொகையாக செலுத்தி அதற்கான பத்திரங்களை முத்துப்பாண்டியின் மனைவி மற்றும் குழந்தைகளிடம் இன்று (ஜுலை 14) ஒப்படைத்தனர்.
இந்நிகழ்ச்சியில், 2003-ம் ஆண்டு பணியில் சேர்ந்த காவலர்கள் பலர் கலந்துகொண்டு முத்துப்பாண்டி உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.