கும்பகோணம்: கும்பகோணத்தில் தமிழக அரசின் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை, கிரீன் நீடா சுற்றுச்சூழல் அமைப்பு மற்றும் தமிழ்நாடு தன்னார்வலர் அமைப்பு சார்பில் காவிரி கரையில் 1 கோடி பனை விதைகள் நடும் பணிக்காக 11 இடங்களில் பனை விதை வங்கிகள் தொடக்கப்பட்டுள்ளது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
அக்கூட்டத்துக்கு சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் மருத்துவர் ப்ரீத்தி சந்திரமோகன் தலைமை வகித்தார். கிரீன் நீடா மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கே.ஆர்.கே. ஜானகி ராமன், பூம்புகார் பனை அமைப்பின் தலைவர் ரவீந்திரன், மிஸ்வா அமைப்பின் தலைவர் அப்துல் அஜீஸ், புதுக்கோட்டை மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் ஆவுடை யூனூஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் கிரீன் நீடா சுற்றுச்சூழல் அமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளரும், 1 கோடி பனை நடும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளருமான மு.ராஜவேலு கூறியது: "ஒகேனக்கல் முதல் பூம்புகார் வரை 416 கி.மீ. தூரத்திற்கு செப். 1ம் தேதி பனை விதைகள் நடும் பணி நநடைபெறுகிறது. இதற்காக கும்பகோணம், சுந்தரப் பெருமாள் கோவில், நீடாமங்கலம், திருவையாறு, சிறுகமணி, தருமபுரி, ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், பூம்புகார் உள்ளிட்ட 11 ஊர்களில் முதற்கட்டமாகப் பனை விதை வங்கிகள் தொடங்கப்பட்டுள்ளது. இங்கு பொதுமக்கள் பனை விதைகளை அளிக்கலாம்." என ராஜவேலு கூறியுள்ளார்.
தமிழ்நாடு தன்னார்வலர் அமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் என்.ஹரிகிருஷ்ணன் கூறியது: "காவிரியில் ஒரு கோடி பனை விதைகள் நடும் பணியில் பங்கேற்க விரும்பும் தன்னார்வலர்கள் https://Udhavi.app/panai என்ற இணைய தளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். பனை விதைகள் விதைப்பில் பங்கேற்பவர்களுக்குச் சான்றிதழ் வழங்கப்படும்." என்றார்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: காவிரிக் கரையில் ஒரு கோடி பனை விதைகள் நடும் பணிக்கு 100 நாள் பணியாளர்களைப் பங்கேற்கச் செய்வது தொடர்பாக அந்தத் துறைக்கு கடிதம் வழங்குவது, பணை விதைகள் சேகரிப்பு, விதைப்பு பணிகளை எளிமையாகச் செய்து முடித்திட தன்னார்வலர்களைக் கொண்ட குழு அமைப்பது, பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்களை பங்கேற்கச் செய்வது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. முன்னதாக, சமூக ஆர்வலர் பெஞ்சமின் வரவேற்றார். முடிவில் கிரீன் நீடா அமைப்பின் இணை ஒருங்கிணைப்பாளர் சி.செந்தில் குமார் நன்றி கூறினார்.