புதுக்கோட்டையில் புத்தகங்களுடன் வலம் வரும் அரசுப் பேருந்து: மக்கள் உற்சாக வரவேற்பு


புதுக்கோட்டை: புதுக்கோட்டை புத்தகத் திருவிழா குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக புத்தகங்களோடு இயக்கப்பட்டு வரும் அரசு பேருந்துக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டு வருகிறது.

புதுக்கோட்டை மன்னர் அரசு கலை அறிவியல் கல்லூரியின் விளையாட்டு மைதானத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இணைந்து 7-வது புத்தகத் திருவிழா ஜூலை 27-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 5-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்தப் புத்தகத் திருவிழா குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் சுவர் விளம்பரங்கள் எழுதப்பட்டு வருகின்றன.

கடந்த வாரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகள், கல்லூரிகளில் ஒரே நேரத்தில் அனைத்து மாணவர்களும் புத்தகங்களை வாசித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். கல்வி நிறுவனங்கள் மட்டுமின்றி வணிக நிறுவனங்கள், நூலகங்கள், பொது இடங்களிலும் வாசிக்கப்பட்டது. குறிப்பாக, 100 நாள் வேலை திட்டம் செயல்படுத்தப்பட்ட இடத்திலும் கூட பணியாளர்கள் புத்தக வாசிப்பில் கலந்து கொண்டனர்.

விழிப்புணர்வு பணியில் ஒரு பகுதியாக மாவட்டத்தின் கடைகோடி கிராமங்கள் வரை புத்தகத் திருவிழா குறித்த தகவல்களை கொண்டு செல்வதற்காக இருக்கைகள் இல்லாத ஒரு அரசு பேருந்து ஏற்பாடு செய்து, அதில் அலமாரிகள் பொருத்தப்பட்டு, நூற்றுக்கணக்கான புத்தகங்களும் இடம் பெற செய்யப்பட்டுள்ளன. பேருந்தின் உள் மற்றும் வெளிப் பகுதியில் புதுக்கோட்டையில் இதற்கு முன்பு நடத்தப்பட்ட புத்தகத் திருவிழா தொடர்பான புகைப்படங்கள் இடம் பெறும்படி செய்யப்பட்டுள்ளன.

மேலும், நடைபெற உள்ள 7-வது புத்தகத் திருவிழா குறித்த ததவல்களும் இடம் பெற செய்யப்பட்டுள்ளது. இந்த விழிப்புணர்வு பேருந்து புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலகத்தில் இன்று தொடங்கி வைக்கப்பட்டது. இதை ஆட்சியர் ஐ.எஸ். மெர்சி ரம்யா பச்சைக்கொடி அசைத்து தொடங்கி வைத்தார். அதைத் தொடர்ந்து பல்வேறு இடங்களுக்கு இப்பேருந்தானது இயக்கப்பட்டு வருகிறது. செல்லும் இடங்களில் எல்லாம் பொதுமக்கள், வணிகர்கள், மக்கள் பிரதிநிதிகள், தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தினர், ஆசிரியர்கள், கலைஞர்கள் திரண்டு உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர்.

மேலும், பேருந்தின் அருகே நின்று செல்ஃபி எடுத்துக் கொள்கின்றனர். பேருந்துகளில் இருக்கும் புத்தகங்களை வாசிக்கின்றனர். அதோடு, அப்பகுதியினருக்கு துண்டறிக்கைகளும் விநியோகிக்கப்படுகிறது. புதுக்கோட்டைக்கு புதிய முயற்சியாக இயக்கப்பட்ட இப்பேருந்தானது, மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த பேருந்தானது வரும் 26-ம் தேதி வரை இயக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. நிகழாண்டு புதிய இடத்தில் நடைபெறக் கூடிய இந்த புத்தகத் திருவிழாவில் கூடுதல் அரங்குகள் ஏற்படுத்தப்பட உள்ளதாகவும், குழந்தைகளுக்கு என்று ஏராளமான புத்தகங்கள் இடம் பெற உள்ளன.

ஆட்சியரின் அறிவுறுத்தலோடு முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதற்கான பணிகளில் மாவட்ட நிர்வாகத்தின் பல்வேறு துறை அலுவலர்கள், புத்தகத் திருவிழா ஒருங்கிணைப்பாளர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் மூலம் கடந்த ஆண்டை விட நிகழாண்டு கூடுதலான தொகைக்கு புத்தகங்கள் விற்பனையாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. புத்தகத் திருவிழா தொடர்பான மேலதிக தகவலுக்கு 9443126025 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளளாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

x