நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி திராவிட கழகத்தினர் வாகன பரப்புரை பேரணி @ கும்பகோணம்


பேரணி

கும்பகோணம்: மத்திய அரசு நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி திராவிட கழக இளைஞரணி மற்றும் திராவிட மாணவர் கழக சார்பில் இருசக்கர வாகன பரப்புரை பேரணி கும்பகோணம் வட்டம் சாக்கோட்டையில் இன்று (ஜுலை 14) தொடங்கியது.

நீட் தேர்வை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி திராவிட கழக இளைஞரணி மற்றும் மாணவர் கழக சார்பில் 5 குழுக்கள் தமிழகம் முழுவதும் இருசக்கர வாகனப் பரப்புரை பேரணி அண்மையில் தொடங்கியது. இதில் 2 குழுகள் ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 12-ம் தேதி பேரணியைத் தொடங்கின. இதையடுத்து நேற்று கும்பகோணத்திற்கு வந்த, அந்த இரு சக்கர பேரணி, பல்வேறு பிரதானச் சாலை வழியாகச் சென்று பரப்புரை மேற்கொண்டது.

இதைத் தொடர்ந்து, இன்று காலை கும்பகோணம் வட்டம், சாக்கோட்டையில் உள்ள பெரியார் பகுத்தறி பாடசாலை பள்ளியில் தொடங்கிய இருசக்கர வாகன பரப்புரை பேரணியை கும்பகோணம் எம்எல்ஏ சாக்கோட்டை க.அன்பழகன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

முன்னதாக, கும்பகோணம் திக மாநகர செயலாளர் கா.சிவகுமார் வரவேற்றார். கும்பகோணம் திக மாநகரத் தலைவர் பி.ரமேஷ் தலைமை வகித்தார். கும்பகோணம் மாவட்டத் தலைவர் கு.நிம்மதி, தலைமைக் கழக அமைப்பாளர் க.குருசாமி, கும்பகோணம் மாவட்டச் செயலாளர் கு.துரைராசு ஆகியோர் முன்னிலை வைத்தனர். இந்தப் பேரணி திருவாரூர் மாவட்ட வழியாக சென்று, வரும் ஜூலை 15-ம் தேதி சேலத்தில் நிறைவடைகிறது.

x