தாம்பரம்: மேற்கு தாம்பரத்தில் இருந்து மேடவாக்கம், பள்ளிக்கரணை வழியாக வேளச்சேரிக்கு தடம் எண் 51 என்ற மாநகர பேருந்து இயக்கப்பட்டு வருகிறது. இதில் காலை மற்றும் மாலை நேரங்களில் பெரும்பாலும் கல்லூரி மற்றும் அரசு பள்ளி மாணவர்கள் பயணிக்கின்றனர்.
நேற்று முன்தினம் மாலை வழக்கம் போல் தாம்பரம் எம்சிசி கல்லூரி எதிரில் உள்ள பேருந்து நிலையத்திலிருந்து புறப்பட்டு சென்றது. பேருந்தை பாலமுருகன் ஓட்டிவந்தார், பேருந்து சேலையூர் பேருந்து நிறுத்தத்துக்கு வந்து பயணிகள் ஏறிய உடன் பேருந்து புறப்பட்டது. அப்போது படிக்கட்டில் மாணவர்கள் தொங்கியவாறு வந்துள்ளனர். இதனால் நடத்துநர் வேல்முருகன் பேருந்தை நிறுத்தி கீழே இறங்கி மாணவர்களை கண்டித்துள்ளார்.
பின்னர் மீண்டும் பேருந்து புறப்பட்டு சிறிது தூரம் சென்ற உடன் மாணவர்கள் கற்களை எடுத்து பேருந்தின் மீது அடித்ததில் பேருந்தின் பின்புற கண்ணாடி உடைந்து நொறுங்கியது. உடனே மாணவர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர். இதையடுத்து நடத்துநர் சேலையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னையில் படிக்கட்டில் மாணவர்கள் தொங்கியவாறு பேருந்தில் பயணித்த மாணவர்களை நடத்துநர் கண்டித்ததால் ஆத்திரமடைந்த மாணர்கள் பேருந்தின் பின்புற கண்ணாடியை உடைத்தனர்.