மதுவிலக்கு திருத்த சட்டம் நடைமுறைக்கு வந்தது


கோப்புப்படம்

சென்னை: தமிழ்நாடு மதுவிலக்கு திருத்தச் சட்டம் அமலுக்கு வந்துள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசுவெளியிட்ட செய்திக்குறிப்பு:

கள்ளச்சாராயம் காய்ச்சுவோர் மற்றும் விற்பனை செய்வோர் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கும் வகையில் திருத்தங்களுடன் மதுவிலக்குத் திருத்தச் சட்ட மசோதாவுக்கு ஆளுநரால் ஜூலை 11-ம்தேதி ஒப்புதல் அளிக்கப்பட்டு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளன.

1937-ம் ஆண்டு தமிழ்நாடு மதுவிலக்குச் சட்டத்தின் கீழ் 100 லிட்டருக்கு மேல் சட்டவிரோதமான மதுபானம் இறக்குமதி, ஏற்றுமதி, போக்குவரத்து அல்லது வைத்திருத்தல், சட்டவிரோதமான மதுபானம் தயாரித்தல், சட்டவிரோதமான மதுபான ஆலைஅல்லது மதுபான நொதி வடிப்பாலையினை கட்டுதல், விற்பனைக்கான சட்டவிரோதமான மதுபானங்களை குப்பியில் அடைத்தல் ஆகியவற்றுக்கு திருத்தப்பட்ட சட்டத்தின்படி, 3 ஆண்டுகள் முதல் 7 ஆண்டுக்கு குறைவில்லாத கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் ரூ.2 லட்சம் முதல் ரூ.3 லட்சம் வரையிலான அபராதம் விதிக்கப்படும்.

50 லிட்டருக்கு மேல் 100 லிட்டர் வரையிலான சட்டவிரோதமான மதுபானம் இறக்குமதி, ஏற்றுமதி, போக்குவரத்து அல்லது வைத்திருத்தல் குற்றத்துக்கு 2 முதல் 5 ஆண்டுகள் வரையிலான கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் ரூ.1 லட்சம் முதல் ரூ.2 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும்.

மதுவை உட்கொள்வதால் இறப்பை ஏற்படுத்தும் சட்டவிரோதமான மதுபானம் தொடர்புடைய குற்றங்களுக்கு ஆயுட்காலத்துக்கு கடுங்காவல் சிறை மற்றும் ரூ.10 லட்சத்துக்கு குறையாத அபராதம் விதிக்கப்படும்.

மேலும், குற்றம் சாட்டப்பட்டவர்கள் எளிதில் பிணையில் வெளியில் வரமுடியாதவாறு கடும் சட்டப்பிரிவும் புதிய திருத்தப்பட்ட சட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. அதோடு, அரசு தரப்பு வழக்கறிஞரின் சம்மதமின்றி பிணை வழங்கஇயலாத வகையிலும் புதிய சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

x