2026-ல் கூட்டணியில் சேர கட்சிகள் தேடி வரும் வகையில் அதிமுகவினர் களப்பணி ஆற்ற வேண்டும்:இபிஎஸ்


அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி

சென்னை: தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தலில் கூட்டணி வைக்க அரசியல் கட்சிகள் அதிமுகவை தேடி வரும் வகையில் களப்பணி ஆற்ற வேண்டும் என்று நிர்வாகிகளுக்கு கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார்.

மக்களவைத் தேர்தல் தோல்வி குறித்து மக்களவைத் தொகுதி வாரியாக கட்சி நிர்வாகிகளுடன் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி கடந்த 10-ம் தேதி முதல் ஆலோசனை நடத்தி வருகிறார். 4-வது நாளாக நேற்று சிதம்பரம் மக்களவைத் தொகுதி நிர்வாகிகளுடன், கட்சியின் அவைத் தலைவர்தமிழ் மகன் உசேன், முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், கே.பி.முனுசாமி, எஸ்.பி.வேலுமணி, திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் முன்னிலையில் ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய சிதம்பரம் மக்களவைத் தொகுதி நிர்வாகிகள், சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் இடம் பெற்றுள்ள அரியலூர், ஜெயங்கொண்டம் ஆகிய சட்டப்பேரவை தொகுதிகளில் அதிமுக அதிக வாக்குகள் பெற்று முதலிடத்தில் உள்ளது. மற்ற 4 தொகுதிகளில் 2-ம் இடத்தை பிடித்துள்ளது. மொத்தம் இத்தொகுதியில் 4.5 லட்சம் வாக்குகளை பெற்றிருக்கிறோம். அதிமுக வாக்கை நாங்கள் பெற்று கொடுத்து விட்டோம். கூட்டணி பலமாக அமையாததால் அதன் வாக்குகள்தான் கிடைக்கவில்லை. 2026 மக்களவைத் தேர்தலில் பலமான கூட்டணி அமைக்க வேண்டும் என்று தெரிவித்ததாக கூறப்படுகிறது.

அதனைத் தொடர்ந்து பேசிய பழனிசாமி, மற்ற 4 தொகுதிகளிலும் தொண்டர்கள், நிர்வாகிகள் தீவிரமாக பணியாற்ற வேண்டும். வரும் சட்டப்பேரவை தேர்தலில் கூட்டணி அமைக்க அரசியல் கட்சிகள் அதிமுகவை தேடி வரும் வகையில் கட்சியினர் களப்பணி ஆற்ற வேண்டும். கட்சியில் இளைஞர்களை அதிக அளவில் சேர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து மதுரை மற்றும் பெரம்பலூர் ஆகிய மக்களவைத் தொகுதி நிர்வாகிகளுடனும் பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.

ஆலோசனைக் கூட்டங்களில் செம்மலை, அமைப்பு செயலாளர்கள் முருகமாறன், வரகூர் அருணாச்சலம், மாவட்ட செயலாளர்கள் தாமரை ராஜேந்திரன், அருள்மொழி தேவன், கே.ஏ.பாண்டியன், இளம்பை தமிழ்ச்செல்வன், செல்லூர் ராஜு, ராஜன் செல்லப்பா, ஆர்.பி.உதயகுமார், அதிமுக சார்பில் போட்டியிட்ட மதுரை சரவணன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டுள்ளனர்.

x