கோவளம்: பழைய மகாபலிபுரம் சாலை மற்றும் கிழக்கு கடற்கரை சாலையில் 50-க்கும் மேற்பட்ட விலை உயர்ந்த பைக்குகளில் ரேஸில் ஈடுபட்ட இளைஞர்களை போலீஸார் மடக்கி பிடித்தனர். தொடர்ந்து அவர்களுக்கு அறிவுரைகள் வழங்கி எச்சரித்து அனுப்பினர்.
சென்னை - மகாபலிபுரம் இடையிலான கிழக்கு கடற்கரை சாலை மற்றும் மகாபலிபுரம் - புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலை, பழைய மகாபலிபுரம் சாலை உள்ளிட்ட சாலைகளில் வார இறுதி நாட்களில் இளைஞர்கள் பைக் ரேஸ் செல்வது அதிகரித்து வருகிறது. நவீன வசதிகள் கொண்ட விலை உயர்ந்த பைக்கில் வரும் இளைஞர்கள், இலக்கு ஒன்றை நிர்ணயித்து அதை குறைவான நேரத்தில் கடப்பது எனப் பந்தயம் கட்டி ரேஸ் நடத்தப்படுகிறது. இந்த ரேஸில் பங்குபெறும் பைக்குகள் அதிவேகத்தில் வரிசையாக பலத்த ஒலியுடன் சீறிப் பாய்கின்றன. இதனால் சாலையில் செல்லும் பிற இருசக்கர வாகன பயணியர் விபத்து அச்சத்துடன் செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது. தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டாலும் பைக் ரேஸ் விடுவதும் தொடர்கதையாகி வருகிறது.
இந்தநிலையில் பழைய மகாபலிபுரம் சாலை மற்றும் கிழக்கு கடற்கரை சாலையில் விடுமுறை தினமான இன்று அதிகாலை முதல் பைக் ரேஸ் நடைபெற்று வருவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து பள்ளிக்கரணை போக்குவரத்து உதவி ஆணையர் ஸ்ரீதர் தலைமையில், ஆய்வாளர் கருணாகரன் மற்றும் போக்குவரத்து போலீஸார் கோவளம் அடுத்த குன்னுக்காடு கிழக்கு கடற்கரை சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது 50-க்கும் மேற்பட்ட விலை உயர்ந்த பைக்கில் ரேஸில் ஈடுபட்ட இளைஞர்களை மடக்கி பிடித்தனர். பின்னர் அவர்களுக்கு போலீஸார் அறிவுரைகள் வழங்கி எச்சரித்து அனுப்பினர்.
கடற்கரை சாலையில் விலையுயர்ந்த பைக்குகளில் ரேஸ் செல்லும் இளைஞர்கள் பலரும் அரசியல் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களின் மகன் மற்றும் உறவினர்களாகவே உள்ளனர். இதனால் போலீஸார் உரிய நடவடிக்கை எடுக்க தக்கம் காட்டுக்கின்றனர். இதனால் அவர்களும் தொடர்ந்து பைக் ரேஸ் நடத்துகின்றனர். வேகமாக சென்றால் தானாகவே அபராதம் விதிக்கும் முறையை கிழக்கு கடற்கரை சாலையில் அமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
தானாகவே அபராதம் விதிக்கும் முறை: கிழக்கு கடற்கரை சாலையில் நான்கு இடங்களில் அதிக வேகம் சென்றால் தானாகவே அபராத விதிக்கும் திட்டம் நடைமுறையில் உள்ளது. அதன் மூலம் வேகமாக செல்வோருக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. மேலும் இன்று பைக் ரேஸ் ஈடுபட்டவர்கள் முதல்முறையாக அதில் ஈடுபட்டுள்ளனர். இதுபோன்று பைக் ரேஸில் ஈடுபடக் கூடாது இது சட்டவிரோதம் என அவர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கி மீண்டும் இதுபோன்ற சம்பவத்தில் மீண்டும் ஈடுபட்டால் பைக் பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்யப்படும் என எச்சரித்து அனுப்பி இருக்கிறோம். தொடர்ந்து கிழக்கு கடற்கரை சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகளில் பைக் ரேஸ் நடத்துவது தொடர்ந்து கண்காணிக்கப்படும் என போலீஸார் தெரிவித்தனர்.