கேரள மாநில கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் செயலாளரான கொடியேரி பாலகிருஷ்ணனின் உடலுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
கேரள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநில செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கொடியேரி பாலகிருஷ்ணன் (68), புற்றுநோய் பாதிப்பு காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப் பட்டிருந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று அவர் உயிரிழந்தார்.
அதனையடுத்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் ஆகியோர் நேரில் மருத்துவமனைக்குச் சென்று கொடியேரி பாலகிருஷ்ணன் உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். இதேபோல தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி மருத்துவமனைக்கு சென்று அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.
கண்ணூர் நகரைச் சேர்ந்த கொடியேரி பாலகிருஷ்ணன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளராக 15 ஆண்டு காலம் பதவி வகித்தவர். 2006 - 2011-ம் ஆண்டு வரை அச்சுதானந்தன் தலைமையிலான அரசாங்கத்தில் உள்துறை மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சராக பதவி வகித்தவர்.
அவரது உடல் இன்று மாலை மூன்று மணி அளவில் தலைச்சேரியில் உள்ள டவுன்ஹாலில் பொது மக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டு பின்னர் அரசு மரியாதைகளுடன் பையம்பலத்தில் உள்ள மயானத்தில் எரியூட்டப்பட உள்ளது.