விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக வெற்றி: அதிகாரப்பூர்வ அறிவிப்பு


விழுப்புரம்: விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா 1.23 லட்சம் வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினராக பதவி வகித்து வந்த திமுகவின் புகழேந்தி, உடல்நலக்குறைவால் கடந்த ஏப்ரல் மாதம் காலமானார். இதையடுத்து கடந்த ஜூலை 10ம் தேதி விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்த தேர்தலில் திமுக சார்பில் அன்னியூர் சிவா, பாமக சார்பில் சி.அன்புமணி, நாம் தமிழர் கட்சி சார்பில் மருத்துவர் அபிநயா ஆகியோர் முக்கிய வேட்பாளர்களாக களம் இறங்கினர்.

மொத்தம் 29 வேட்பாளர்கள் களத்தில் இருந்த நிலையில், தேர்தலில் பதிவான வாக்குகள், இன்று எண்ணப்பட்டது. துவக்கம் முதலே திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா தொடர்ந்து முன்னிலை வகித்து வந்தார். 20 சுற்றுகளாக வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற நிலையில், தற்போது திமுக வேட்பாளர் 1,23,195 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அவருக்கு அடுத்தபடியாக பாமக வேட்பாளர் அன்புமணி 56,026 வாக்குகள் பெற்றுள்ளார். இருவருக்கும் இடையேயான வாக்கு வித்தியாசம் 67,169 ஆகும்.

நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் 10,479 வாக்குகள் பெற்றுள்ளார். இதனால் அவர் இந்த தேர்தலில் டெபாசிட் இழந்துள்ளார். தேர்தல் மன்னர்கள் பத்மராஜன், நூர் முகமது ஆகியோரும் இந்த தேர்தலில் போட்டியிட்ட நிலையில், திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா மற்றும் பாமக வேட்பாளர் அன்புமணி தவிர மற்ற 27 பேரும் தங்களது டெபாசிட்களை இழந்து உள்ளனர்.

x