கடையநல்லூர் அருகே காட்டு யானை மிதித்து காவலாளி உயிரிழப்பு - விவசாயிகள் அச்சம்


தென்காசி: கடையநல்லூர் அருகே நேற்று இரவு வயலில் காவலுக்கு இருந்த காவலாளி ஒருவரை காட்டு யானை தாக்கியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

தென்காசி மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையையொட்டிய விவசாய நிலங்களில் காட்டு யானைகள், காட்டுப்பன்றிகள், கரடிகள் அடிக்கடி புகுந்து சேதப்படுத்தி வருகின்றன. இதனால் விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர். கடையநல்லூர் அருகே உள்ள விவசாய நிலங்களில் யானைகள் தொல்லை கடந்த சில மாதங்களாக அதிகரித்து வருகிறது.

யானைகள் வனப்பகுதிக்குள் செல்லாமல் தொடர்ந்து விவசாய நிலங்களில் மா, தென்னை, வாழை உள்ளிட்ட பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. யானைகளை வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுத்தாலும், மீண்டும் அவை விவசாய நிலங்களில் புகுந்து சேதப்படுத்துவது வாடிக்கையாக உள்ளது.

யானைகளை வனப்பகுதிக்குள் விரட்ட நிரந்தர நடவடிக்கை எடுக்கக் கோரியும், வன விலங்குகளால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கக் கோரியும் வடகரை பகுதியில் அண்மையில் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, வன விலங்குகளால் தங்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் அச்சம் தெரிவித்தனர்.

இந்நிலையில், கடையநல்லூர் அருகே காட்டு யானை தாக்கி தோட்டக் காவலாளி உயிரிழந்த சம்பவம் விவசாயிகளை மேலும் அச்சப்படுத்தி உள்ளது. கடையநல்லூர் அருகே உள்ள வலையர் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் மூக்கையா (60). இவர், அதே பகுதியைச் சேர்ந்த பிள்ளையார் பாண்டியன் என்பவரது விவசாய நிலத்தில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார்.

நேற்று இரவு வழக்கம்போல மூக்கையா காவல் பணியில் ஈடுபட்டுள்ளார். அப்போது, நள்ளிரவில் நிலத்துக்குள் காட்டு யானை ஒன்று புகுந்துள்ளது. அந்த யானை மூக்கையாவை தாக்கி மிதித்ததில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த கடையநல்லூர் வனச்சரக அலுவலர் சுரேஷ், காவல் ஆய்வாளர் பாலகிருஷ்ணன் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

மூக்கையாவின் உடலை மீட்ட போலீஸார், பிரேதப் பரிசோதனைக்காக கடையநல்லூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். உயிரிழந்த மூக்கையாவுக்கு பெருமாத்தாள் என்ற மனைவியும், ராக்கம்மாள், குருவம்மாள், ராமலட்சுமி என்ற 3 மகள்களும் உள்ளனர். இந்நிலையில், யானை மிதித்து பலியான மூக்கையா குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி அவரது உறவினர்களும் பொதுமக்களும் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். வனத்துறையினரும், போலீஸாரும் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை சமாதானப்படுத்தினர்.

x