`எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் தலையிட ஆளுநர்களுக்கு என்ன தகுதி இருக்கிறது?- கொந்தளித்த ராகுல்


"எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் பாஜக, ஆர்எஸ்எஸ் இயக்கங்கள் ஆளுநர்களை அரசுக்கு எதிராக செயல்பட வைக்கின்றனர். இவர்களுக்கு என்ன தகுதி இருக்கிறது" என்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ராகுல்காந்தி காட்டமாக பேசினார்.

நீலகிரி மாவட்டம், கூடலூரில் இந்திய ஒற்றுமை பயணத்தை காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இன்று மேற்கொண்டார். பின்னர் கூடலூர் பேருந்து நிலையம் பகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய ராகுல் காந்தி, "எனது சகோதரி சிம்லாவில் ஒரு வீடு கட்டினார். அதற்கு அவருக்கு ஒரு கனவாக இருந்தது. அவ்வளவு அழகான ஊர். ஆனால், கூடலூர் வந்த பிறகுதான் இவ்வளவு அழகான காலநிலையில் உள்ள ஊரை பார்க்கிறேன். இங்கு மூன்று மொழிகளான தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய மூன்று மொழிகளை மக்கள் பேசுகின்றனர். இங்கு மூன்று கலாச்சாரங்களும் உள்ளன. இங்கு ஒருவரை ஒருவர் மதிக்கின்றனர்.

பாசத்தோடு நடந்துக் கொள்கின்றனர். யாரும் தரக்குறைவாக நடந்துக்கொள்வதில்லை. இந்திய ஒற்றுமை பயணம் ஆரம்பிக்கும்போது இந்த கனவு தான் என்னிடம் இருந்தது. அதை இங்கு கண்கூடாக பார்க்கிறேன். மூன்று மொழிகள் பேசும் மக்கள், ஒற்றுமையாக உள்ளதுபோலதான் இந்தியாவிலும் ஒற்றுமை ஏற்பட வேண்டும். இவ்வளவு பெரிய கூட்டத்தில், ஆண், பெண், சிறுவர், முதியவர் அனைவரும் ஒன்றாக ஒற்றுமையாக நடந்து வந்தனர். இங்கு யாரும் எந்த மொழியும் பேசக்கூடாது என சொல்வதில்லை. இந்தியா முழுவதிலும் இந்த எண்ணம் இருக்க வேண்டும். சில இயக்கங்கள் இங்கு அமைதியை குலைக்க மக்களிடம் வெறுப்புணர்வை தூண்டுகின்றன.

இந்தியாவில் வேலைவாய்ப்பின்மை தலைவிரித்தாடுகிறது. இந்தியா என்ற நதியில் யாரும் எந்த மொழியை பேசலாம், கலாச்சாரத்தை பின்பற்றலாம், யாரும் யாரையும் அவமதிக்கக் கூடாது. பிரிவினையை நாங்கள் அனுமதிக்க மாட்டோம். எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் இயக்கங்கள் ஆளுநர்களை அரசுக்கு எதிராக செயல்பட வைக்கின்றனர். இவர்களுக்கு என்ன தகுதி இருக்கிறது. ஒரு ஆளுநர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவரா?.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் ஆட்சியில் தலையிடுவது எந்த விதத்தில் நியாயம். மாநிலங்களின் ஜிஎஸ்டி வருவாயை மத்திய அரசு உரிய நேரத்தில் கொடுக்க வேண்டும். அது மக்களின் பணம். அதை வைத்துக்கொள்ள இவர்கள் யார். மத்திய அரசும், மாநில அரசுகளும் ஒன்றாக இணைந்து செயல்பட வேண்டும்.

பாஜக அரசு ஒரே மொழி, ஒரே கலாச்சாரத்தை திணிக்க பார்க்கிறது. இது போன்ற இந்தியாவை காங்கிரஸ் வெறுக்கிறது. பல மொழி, பல காலச்சாரத்தை கொண்டது நமது நாடு. வேற்றுமையில் ஒற்றுமை காண்பது நமது லட்சியம். விலைவாசி உயர்வு, பெட்ரோல், டீசல், காஸ் விலை உயர்வால் இந்திய மக்கள் கஷ்டப்பட்டு வருகின்றனர். சிறு தொழில் முனைவர், வியாபாரிகள் ஜிஎஸ்டியால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஸ்டார்ட்அப் தொழில்முனைவோர்களை நான் சந்தித்தேன். மத்திய அரசு கொண்டு வந்த ஜிஎஸ்டி, எந்த விதத்தில் உதவியது என கேள்வி எழுப்பினேன். அவர்கள் அனைவரும் ஜிஎஸ்டி ஒரு பேரழிவு என்றனர். பண மதிப்பிழப்பு குறித்து கேட்டேன். அதுவும் பேரிடர் என்றனர்.

பெட்ரோல், டீசல் வருவாய், ஜிஎஸ்டி வருவாயை ஆட்சியாளர்கள் மக்களின் பாக்கெட்டிலிருந்து பணத்தை பிடிங்கி குறிப்பிட்ட பெரும் முதலாளிகளுக்கு வாரி வழங்குகின்றனர். இது போன்ற இந்தியாவை நாங்கள் ஏற்றுக்கொள்வதில்லை. ஏழைகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் இது போன்ற இந்தியாவை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம்" என்று கூறினார். கூட்டத்தில், ராகுல்காந்தி பேசிக்கொண்டிருந்த போது தொழுகைக்காக பாங்கு ஒலித்தது. உடனே அவர் தனது பேச்சை நிறுத்தி, பாங்கு முடிந்ததும் மீண்டும் பேச்சை தொடர்ந்தார்.

x