கருணாநிதி குறித்த சர்ச்சை பாடலை பாடியது சரியா? - சீமான் விளக்கம்


சென்னை: முன்னாள் முதல்வரும், திமுக முன்னாள் தலைவருமான கருணாநிதி குறித்து சர்ச்சைக்குரிய பாடலை பாடிய விவகாரம் தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விளக்கமளித்துள்ளார்.

விக்கிரவாண்டி இடைத் தேர்தல் பிரச்சார மேடையில், முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்து சர்ச்சைக்குரிய பாடல் ஒன்றை நாம் தமிழர் கட்சி நிர்வாகி சாட்டை துரைமுருகன் பாடினார். இதுகுறித்த புகாரின்பேரில் சாட்டை துரைமுருகன் போலீஸாரால் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார்.

இந்நிலையில், நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும் அதே பாடலை, செய்தியாளர்கள் சந்திப்பின்போது மீண்டும் பாடி, முடிந்தால் தன்னை கைது செய்யுங்கள் என சவால் விட்டார். இந்த விவகாரம் மீண்டும் சர்ச்சையானது. குறிப்பாக திமுகவினர் தங்கள் தலைவரை தரக்குறைவாக விமர்சித்ததற்கு சீமானுக்கு கடும் கண்டனங்களை தெரிவித்தனர்.

இந்நிலையில், சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த சீமான், இந்த விவகாரம் தொடர்பாக கூறியதாவது: "சாட்டை துரைமுருகன் மேடையில் பாடிய பாடல் அவருக்கு தெரியாது. நான் பாடிதான் அந்த பாட்டை அவர் கேட்டுள்ளார். அந்த பாட்டுக்கும் எங்களுக்கும் எந்த தொடர்புமில்லை. அதை இயற்றி, பாடி, வெளியிட்டது அதிமுகதான்.

அம்மையார் ஜெயலலிதா இருந்தபோது பல நூற்றுக்கணக்கான மேடைகளில் அந்தப் பாடல் பாடப்பட்டிருக்கிறது. அப்போதெல்லாம் இவர்களுக்கு கோபமோ, வருத்தமோ ஏற்படவில்லை. அந்தப் பாடலை நாங்கள் எடுத்து பாடினால் அப்படி ஆகிவிட்டது, இப்படி ஆகிவிட்டது என்கிறார்கள். அவதூறு, அசிங்கமான அரசியல் இவற்றுக்கெல்லாம் ஆதித் தாய் திமுகதான்.

கருணாநிதியே, காமராஜர், இந்திராகாந்தி, எம்ஜிஆர், ஜெயலலிதா மீது கடுமையான விமர்சனங்களை வைத்துள்ளார். இழிவான பேச்சாளர்களை வைத்திருந்த கட்சி திமுகதான். ஜெயலலிதா குறித்து வெற்றிகொண்டான் மேடையில் பேசியதை எல்லாம் இப்போது பேசி காட்ட முடியாது.

இப்போது திமுகவில் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, சைதை சாதிக் ஆகியோர் மாற்றுக் கட்சி பெண்களைப் பற்றி பேசுவதையெல்லாம் கேட்டுப்பாருங்கள். நாகரிகமான, கண்ணியமான அரசியல் குறித்து போதிப்பதற்கு தகுதி, நேர்மை ஒரு துளியுமில்லாத கட்சி தமிழ்நாட்டில் இருக்கிறதென்றால் அது திமுகதான். 'சண்டாளன்' என்ற வார்த்தை குறித்து அர்த்தம் எனக்கு தெரியாது.

திரைப்பட பாடல்களில் கூட அந்த வார்த்தை வருகிறது. பாஞ்சாலங்குறிச்சி படம் வெளியான பிறகு இந்த வார்த்தைக்காக ஒரு கடிதம் வந்தது. அப்போதுதான் தெரியும் இந்த வார்த்தைக்கு இப்படி ஓர் அர்த்தம் உள்ளதென்று. அப்போது நான் வருத்தம் தெரிவித்தேன். அதன் பிறகு நாங்கள் அதை பயன்படுத்துவதில்லை. 'சண்டாளன்' என்ற வார்த்தையை அதிகமாக பயன்படுத்தியது கருணாநிதிதான்.

சங்க இலக்கியங்கள், மந்திரங்கள், கந்த சஷ்டி கவசம் இதிலெல்லாம் 'சண்டாளன்' என்ற வார்த்தை உள்ளது. மேல்பாதியில் கோயிலுக்கு நுழையவிடாதபோது, நாங்கள் எல்லாம் தாழ்த்தப்பட்டவர்களா என பேசும்போது வலிக்கவில்லை. நீதிபதி பதவிக்கு பட்டியலினத்தவர் வந்ததை தகுதியால் வந்ததாக கூறாமல், நாங்கள் போட்ட பிச்சை என ஆர்.எஸ்.பாரதி பேசியது இருக்கிறது.

திமுக ஆதரவாளர்கள், யூடியூபர்கள் இணையத்தில் எங்களை பேசும்போது இவர்களுக்கு இனிக்கிறது. நாங்கள் பேசிவிட்டால் இவர்களுக்கு நெஞ்செல்லாம் புண்ணாகிவிடுகிறது" இவ்வாறு சீமான் கூறினார்.

x