தென்மேற்கு பருவமழை தீவிரம்: குற்றாலம் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரிப்பு!


தென்காசி மாவட்டத்தில் மீண்டும் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருவதால் குற்றாலம் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டி வருகிறது.

தென்மேற்கு பருவமழைக் காலமான ஜூன் முதல் செப்டம்பர் மாதம் வரை தென்காசி மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் சாரல் மழை பெய்யும். குளிர்ந்த காற்றுடன் அடிக்கடி பெய்யும் சாரல் மழை, மலையில் தவழ்ந்து செல்லும் மேகக் கூட்டம், ஆர்ப்பரிக்கும் அருவிகள் இவையெல்லாம் சாரல் சீசன் காலத்தில் குற்றாலத்தில் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அலைமோதும்.

இந்த ஆண்டு மே மாதத்தில் பெய்த கோடை மழையால் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. இதைத் தொடர்ந்து மே மாத இறுதியில் தென்மேற்குப் பருவமழையும் தொடங்கியது. சில நாட்கள் சாரல் மழையும், சில நாட்கள் வறண்ட வானிலையும் காணப்பட்டது. கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்த நிலையில், மீண்டும் சாரல் மழை தீவிரம் அடைந்துள்ளதால் குற்றாலம் களைகட்டியுள்ளது.

நேற்று மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகள் மற்றும் மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது. இன்று காலை வரையிலான 24 மணி நேரத்தில் அடவிநயினார் அணைப் பகுதியில் 37 மி.மீ. மழை பதிவானது. குண்டாறு அணையில் 31 மி.மீ, ராமநதி அணையில் 24 மி.மீ, செங்கோட்டையில் 23 மி.மீ, கருப்பாநதி அணையில் 11 மி.மீ, தென்காசியில் 9.20 மி.மீ, ஆய்க்குடி, சிவகிரியில் தலா 5 மி.மீ, கடனாநதி அணையில் 3.10 மி.மீ மழை பதிவானது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் அணைகளுக்கு நீர்வரத்து ஏற்பட்டுள்ளது.

மலைப் பகுதியில் பெய்த மழையால் நேற்று இரவு குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் பாதுகாப்பு கருதி அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டது. இன்று காலையிலும் வெள்ளப்பெருக்கு நீடித்தது. வெள்ளம் குறைந்த பின்னர் அருவிகளில் குளிக்க சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்பட்டனர். விடுமுறை தினமான இன்று குற்றாலத்தில் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அலைமோதியது.

x