`கருணாநிதிக்கு பாரத ரத்னா வழங்க வேண்டும்'- காங்கிரஸ் ஆர்.எஸ்.ராஜனின் அடுத்த அஸ்திரம்


முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட அனைவருக்கும் கோரிக்கைக் கடிதம் அனுப்பியுள்ளார் காங்கிரஸ் விவசாய அணி பொதுச் செயலாளர் ஆர்.எஸ்.ராஜன்.

ஆர்.எஸ்.ராஜன்

காங்கிரஸ் விவசாய அணி பொதுச் செயலாளரான இவர், உதயநிதியை துணை முதல்வர் ஆக்கவேண்டும் என முதன்முதலில் குரல் கொடுத்து பரபரப்பாக்கினார். தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவராக கே.எஸ்.அழகிரி இருக்கத் தகுதியற்றவர். அவருக்குப் பதிலாக கார்த்தி சிதம்பரத்தை மாநிலத் தலைவர் ஆக்கவேண்டும் என பத்திரிகைகளில் விளம்பரம் கொடுத்து பரபரப்பூட்டினார். இந்நிலையில் இப்போது முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என குரல் எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து ஆர்.எஸ்.ராஜன் காமதேனு இணையதளத்திடம் கூறுகையில், “அரை நூற்றாண்டு தமிழக அரசியலின் தவிர்க்க முடியாத ஆளுமை கலைஞர் கருணாநிதி. கதை ஆசிரியர், பத்திரிகை ஆசிரியர், அரசியல்வாதி, அரசியல் கட்சியின் தலைவர், நாடக ஆசிரியர், திரைப்பட வசனகர்த்தா, பேச்சாளர் என பன்முகத்தன்மை கொண்டவர் கருணாநிதி. தமிழக சட்டசபையில் தொடர்ச்சியாக 50 ஆண்டுகளுக்கும் மேலாக எம்.எல்.ஏவாக இருந்த பெருமையும் இவருக்கு உண்டு.

1957 அக்டோபரில் நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போராட்டத்திற்கு தலைமை தாங்கி மத்திய அரசின் இந்தி திணிப்பு முயற்சிக்கு சாவு மணி அடித்தார். 1969-ம் ஆண்டு திமுக தலைவரான கருணாநிதி, தன் மறைவுவரை அந்தப் பொறுப்பில் இருந்தார். இந்திய அரசியல் வரலாற்றில் அரை நூற்றாண்டுகள் ஒருகட்சியின் தலைவராக இருந்த பெருமையும் இவருக்கு மட்டுமே உண்டு. ஐந்து முறை தமிழகத்தின் முதல்வராக இருந்து அவர் செய்த புரட்சிகள் ஏராளம். உழவர் மனம் மகிழ உழவர் சந்தை. ஊனமுற்றோர் என்னும் வார்த்தையை ‘மாற்றுத்திறனாளிகள்’ என மாற்றியது, சமூகக் கேலிக்கு உள்ளான சமூகத்தின் துயர் துடைத்து அவர்களை மூன்றாம் பாலினத்தவர், திருநங்கை, திருநம்பி என மரியாதை தமிழாலே மகிழ்விக்கும் பெயர் சூட்டியது, சமத்துவபுரம் தந்தது என இன்று முழுவதும் பட்டியலிடலாம்.

காங்கிரஸின் மன்மோகன் சிங் ஆட்சி பத்து ஆண்டுகள் தொடர்ந்து தாக்குப்பிடிக்கத் தோள் கொடுத்து நின்றவர் கருணாநிதி. கே.ஆர்.நாராயணன், பிரணாப் முகர்ஜி, பிரதீபா பாட்டில் என பல குடியரசுத் தலைவர்கள் தேர்விலும் கருணாநிதியின் பங்கு முதன்மையானது. மத்தியில் காங்கிரஸ் அரசை பத்து ஆண்டுகள் காத்தவர் என்னும் முறையில் நான் இதற்கு குரல் எழுப்புகிறேன். மறைந்த கருணாநிதிக்கு மத்திய அரசு, உயரிய விருதான பாரத ரத்னா விருதை வழங்க வேண்டும். அதற்கு அரசியல் பாகுபாடுகளுக்கு அப்பாற்பட்டு, ஒட்டுமொத்தத் தமிழர்களும் ஒருசேர குரல் எழுப்ப வேண்டிய நேரமிது. அவருக்கு நூற்றாண்டு நெருங்கும் நேரத்தில் மத்திய அரசு பாரத ரத்னா விருதை உடனே வழங்க வேண்டும்” என்றார்.

x