ஆளுநர் மாளிகை முன்பு போராட்டம்: மதுரை நந்தினி தாம்பரம் ரயில் நிலையத்தில் கைது!


ஆளுநர் மாளிகை முன்பு போராட்டம் நடத்த வந்த மதுரை நந்தினி தாம்பரம் ரயில் நிலையத்தில் கைது செய்ப்பட்டார்.

வாக்குச்சீட்டு முறையில் தேர்தல் நடத்தக் கோரி ஆளுநர் மாளிகை முன்பு போராட்டம் நடத்த வந்த மதுரையைச் சேர்ந்த சட்ட மாணவி நந்தினி மற்றும் அவரது சகோதரி நிரஞ்னா ஆகியோரை போலீஸார் தாம்பரம் ரயில் நிலையத்தில் வைத்து கைது செய்தனர்.

மதுரை புதூரைச் சேர்ந்தவர் மாணவி நந்தினி. தமிழகத்தில் மதுவிலக்கு அமல்படுத்துதல், வாக்குச்சீட்டு முறையில் மட்டுமே தேர்தல் நடத்துதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அவ்வப்போது போராட்டம் நடத்தி வருபவர். அந்த வகையில் வாக்குச் சீட்டு முறையை மீண்டும் கொண்டுவர வலியுறுத்தி இன்று தமிழக ஆளுநர் மாளிகை முன்பு நந்தினியும் அவரது சகோதரி நிரஞ்னாவும் போராட்டம் நடத்த திட்டமிட்டு, நேற்று மதுரையில் இருந்து ரயில் மூலம் சென்னை வந்தனர்.

இந்நிலையில், இது குறித்த தகவல் அறிந்த தாம்பரம் போலீஸார் நேற்று இரவு ரயிலில் வந்த இருவரையும் தாம்பரம் ரயில் நிலையத்தில் வைத்து கைது செய்தனர். பின்னர் காவல் நிலையம் அழைத்து சென்று தீவிர விசாரணை மேற்கொண்டனர். பின்னர் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து, எச்சரித்து இரவு 11 மணிக்கு அந்தியோதயா (சென்னை - நாகர்கோவில்) அதிவிரைவு ரயில் வண்டியில் அவர்களை ஏற்றி மதுரைக்கு அனுப்பி வைத்தனர். முன்னதாக, தாம்பரத்தில் போலீஸார் கைது செய்யும் போது வாக்குச்சீட்டு முறையில் மட்டுமே தேர்தல் நடத்துதல் வேண்டும் என்றும் போலீஸாரை கண்டித்தும் இருவரும் கோஷங்களை எழுப்பினர்.

x