பெட்டி கிடையாது… பேச்சு வார்த்தைதான்!


திமுக அறிவித்திருக்கும் மாவட்டச் செயலாளர்கள் தேர்தலில், முன்பே விடையை எழுதிவிட்டு அதற்கேற்றாற்போல கணக்குப் போடும் நடைமுறையே இப்போதும் தொடர்கிறது. ஒழுங்காக செயல்படாதவர்கள், சர்ச்சைக்குரியவர்கள், உள்ளடி வேலைக்காரர்கள் - இவர்களை எல்லாம் களையெடுக்கும் வைபவமாகவே இந்த தேர்தல் நடக்கும் என நினைத்த திமுக தொண்டர்கள், அப்படி நடக்காது என தெரிந்துவிட்டதால் அவநம்பிக்கைப்பட்டுக் கிடக்கிறார்கள்

பெரும்பாலான மாவட்டச் செயலாளர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட இருக்கிறார்கள். சிட்டிங் மாவட்டச் செயலாளர்களை எதிர்த்து மனு தாக்கல் செய்தால், எப்படி ஓரங்கட்டப்படுவோம் என்பது தெரிந்தும் பல இடங்களில் போட்டுயாளர்கள் களத்துக்கு வந்திருக்கிறார்கள். ஆனால், அவர்களுக்கெல்லாம் காரியம் கைகூடுமா என்று தெரியவில்லை. கருணாநிதி காலத்தில் கொஞ்சம் கொஞ்சமாக ஸ்டாலின் தனது ஆதரவாளர்களை மாவட்ட செயலாளராக நியமித்து தன்னை வலுப்படுத்திக் கொண்டார். அதே நிலைதான் தற்போதும் திமுகவில் உள்ளது.

ஸ்டாலின் தலைமையில் கட்சி இயங்கினாலும் தொலைநோக்குப் பார்வையுடன் உதயநிதியின் சிபாரிசுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. கூடுதலாக சபரீசன், துர்கா ஸ்டாலின் உள்ளிட்டவர்களின் கருணைப் பார்வையில் பட்டவர்களுக்கும் சான்ஸ் அடிக்கிறது. மொத்தத்தில், பிற்காலத்தில் உதயநிதிக்கு சிக்கலாக யாரும் இருந்துவிடக்கூடாது என்பதில் தெளிவாகவே இருக்கிறது திமுக தலைமை. அதற்காக சர்ச்சையான நபர்களிடமும் சமரசம் செய்துகொண்டிருக்கிறது.

திமுக ஆட்சிப் பொறுப்பில் இல்லாமல் இருந்ததால் 10 வருடங்களாக கட்சிப் பதவிகளுக்கு அவ்வளவாக போட்டி இல்லாமல் இருந்தது. இப்போது ஆளும் கட்சி அந்தஸ்து வந்துவிட்டதால் பத்திற்கும் மேற்பட்ட மாவட்டங்களில் மாவட்ட செயலாளர் பதவிக்கு கடும் போட்டி நிலவுகிறது. எப்படியாவது பதவிக்கு வரவேண்டும் என படை திரட்டுபவர்கள் தங்களுக்குத் தெரிந்த வழிகளில் எல்லாம் முட்டி மோதுகிறார்கள். படப்பிடிப்பில் உதயநிதி பிஸி என்பதால் அவர் தொடர்பு எல்லைக்கு அப்பால் இருக்கிறார். இதனால் பலர், தங்களின் சீனியாரிட்டியை எல்லாம் எடுத்துச் சொல்லி துரைமுருகன் வீட்டை வட்டமடிக்கிறார்கள்.

மாவட்டச் செயலாளர் தேர்வு குறித்து அறிவாலயத்தில் சீனியர் நிர்வாகிகளுடன் முன்கூட்டியே ஆலோசனை நடத்தி முடித்து விட்டார் ஸ்டாலின். அந்த ஆலோசனையின் போது, கடந்த தேர்தல்களில் சரிவர பணியாற்றாதவர்கள், உள்ளடி வேலை பார்த்தவர்கள் என சிலரை பட்டியலிட்டு அவர்களை எல்லாம் மாற்றிவிட சீனியர்கள் பரிந்துரைத்ததாகச் சொல்கிறார்கள். அதன் அடிப்படையில், திருச்சி , கோவை, திருப்பூர், தஞ்சாவூர் , விழுப்புரம், நாமக்கல், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருநெல்வேலி, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் திமுகவின் அமைப்பு ரீதியாக உள்ள இருபதுக்கும் மேற்பட்ட மாவட்ட செயலாளர்களில், எட்டுக்கும் மேற்பட்டவர்களை மாற்ற ஸ்டாலின் ஒப்புதல் அளித்ததாகச் சொல்கிறார்கள்.

அதன்படி, கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டச் செயலாளர் செங்குட்டுவன் மாற்றப்பட்டு, பர்கூர் எம்எல்ஏ-வான மதியழகன் புதிய மாவட்ட செயலாளராக வரலாம் என்கிறார்கள். தருமபுரி மேற்கு மாவட்ட செயலார் இன்பசேகரனுக்குப் பதிலாக பாப்பிரெட்டிப்பட்டி பழனியப்பனும், நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளராக உள்ள மூர்த்திக்குப் பதிலாக மாவட்ட இளைஞர் அணி நிர்வாகியான மயூரா செந்திலும் நியமிக்கப்படலாம் என்கிறார்கள். ஐந்து மாவட்டங்களாக இருந்த கோவை திமுக இப்போது மூன்றாக சுருக்கப்பட்டுள்ளது. இதில் கோவை கிழக்கு, வடக்கு மற்றும் புறநகர் மாவட்டங்களுக்கு புதியவர்கள் செயலாளர்களாக வரலாம் என்கிறார்கள்.

ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் பதவிக்கு முன்னாள் மாவட்ட செயலாளர் சுப.த.திவாகரன் வேட்புமனு தாக்கல் செய்திருக்கிறார். தற்போதைய மாவட்ட பொறுப்பாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கத்திற்கு எதிரான இந்த அணிக்கு ஆதரவாக அமைச்சர் ராஜகண்ணப்பன், முன்னாள் எம்பி-யான பவானி ராஜேந்திரன் உள்ளிட்டோர் களமிறங்கியுள்ளனர். தனக்கு மா.செ இப்போதைக்கு சாத்தியமில்லை என்பதால் திவாகரனை கொம்பு சீவுகிறார் ராஜகண்ணப்பன்.

நெல்லை மாவட்டத்தில் ஆவுடையப்பன் உள்ளிட்ட பழையவர்களே மீண்டும் பதவியில் நீடிக்க வாய்ப்பிருக்கிறது. அமைப்பு ரீதியாக நான்கு மாவட்டமாக இருந்த மதுரையும் மூன்றாக குறைக்கப்பட்டுள்ளது. அதில் மதுரை வடக்கு மாவட்ட திமுக செயலாளரான முன்னாள் அமைச்சர் பொன்.முத்துராமலிங்கம் மாற்றப்பட்டலாம் என்கிறார்கள்.

குமரி மாவட்டத்தைப் பொறுத்தவரை முன்னாள் மாவட்டச் செயலாளரான சுரேஷ்ராஜன் அவராகவே ஒதுங்கிக் கொண்டதால், குமரி கிழக்கு மாவட்டத்துக்கு நாகர்கோவில் மேயர் மகேஷ் நியமிக்கப்படலாம். மேற்கு மாவட்டத்துக்கு அமைச்சர் மனோதங்கராஜே செயலாளராக நீடிப்பார்.

கட்சித் தேர்தல் ஜனநாயக ரீதியில் நடைபெறவில்லை. பஞ்சாயத்துப் பேசி பதவிகளைக் கொடுக்கிறார்கள் என்று சொல்லப்படும் நிலையில், திமுக செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவனிடம் இதுகுறித்து பேசினோம்.

“திமுக உட்கட்சி தேர்தல் மூன்று வருடமாகத் தள்ளிப் போன காரணத்தால், தேர்தல் ஆணையத்திடம் தேர்தல் நடத்துவதற்கான கால அவகாசத்தை வாங்கி வைத்திருக்கிறோம். கரோனா, திமுக தலைவரின் உடல்நலக்குறைவு உள்ளிட்ட காரணங்களால் தேர்தல் தள்ளிக்கொண்டே போனது. வழக்கமான முறையில் தேர்தல் நடத்தினால் அதிக காலம் எடுக்கும். அதனால் உட்கட்சி தேர்தலில் மனு தாக்கல் செய்தவர்களையும், அவர்களுக்கு வாக்களிக்க உள்ளவர்களையும் அழைத்துப் பேசி பெரும்பான்மை ஆதரவு உள்ளவர்களுக்கு மாவட்ட செயலாளர் பதவி வழங்க இருக்கிறோம்.

பெட்டி வைக்காமல் பேச்சுவார்த்தை மூலமாகவே மாவட்ட செயலாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். சிலருக்கு அதில் அதிருப்தி இருக்கக்கூடும். அவர்களையும் கட்சி விட்டுவிடாது. நிறைய நியமன பதவிகள், அணி பொறுப்புகள் உள்ளன. அதில் அவர்களுக்கு பொறுப்புகள் வழங்கி அவர்களைப் பயன்படுத்திக் கொள்வோம். 2024 மக்களவைத் தேர்தலில் யார் வேகமாகச் செயல்படுவார்களோ அவர்களைக் கட்சிக்குப் பயன்படுத்திக் கொள்ள் இருக்கிறோம்” என்றார் அவர்.

தலைமைக் கழக நிர்வாகியாக இருக்கும் சீனியரான இளங்கோவன் இப்படிச் சொன்னாலும், “மறுபடியும் இவருதானா... எப்பத்தான் மாத்துவாங்க” என்ற ஆதங்கப் புலம்பல்களே பெருவாரியான மாவட்டங்களில் திமுக தொண்டர்கள் மத்தியில் எதிரொலிக்கிறது!

x