விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா முன்னிலை


விழுப்புரம்: விக்கிரவாண்டி சட்டப் பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் காலை 9 மணி நிலவரப்படி திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா 8,564 வாக்குகள் பெற்று முன்னிலை பெற்றுள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டப் பேரவைத் தொகுதி திமுக எம்எல்ஏ- நா.புகழேந்தி மறைவைத் தொடர்ந்து அத்தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. இத்தேர்தலில் திமுக சார்பில் அன்னியூர் சிவா, பாமக சார்பில் சி.அன்புமணி, நாம் தமிழர் கட்சி சார்பில் அபிநயா ஆகியோர் வேட்பாளர்களாக உள்ளனர்.

இவர்கள் தவிர சுயேச்சைகள் உள்பட மொத்தம் 29 பேர் விக்கிரவாண்டி இடைத்தேர்தல் களத்தில் உள்ளனர். அதிமுக, தேமுதிக கட்சிகள் இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்துவிட்டன. கடந்த 10ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 82.48 சதவீதம் வாக்குகள் பதிவாகின.

இந்நிலையில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. பனையபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி மையத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையத்தில் வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை 8 மணி முதல் நடைபெற்று வருகிறது. தபால் வாக்குளிலும் திமுக வேட்பாளரே முன்னிலைப் பெற்றார்.

காலை 9 மணி நிலவரப்படி திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா 8,564 வாக்குகளும், பாமக வேட்பாளர் அன்புமணி 3,096 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அபிநயா 431 வாக்குகளும் பெற்றுள்ளனர். திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா, அதிக வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளதால் திமுகவினர் மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர்.

x