நியோ மேக்ஸ் விசாரணையை 15 மாதங்களில் முடிக்க வேண்டும்: பொருளாதார குற்றப் பிரிவுக்கு ஐகோர்ட் உத்தரவு


மதுரை: நியோ மேக்ஸ் மோசடி வழக்கு விசாரணையை 15 மாதங்களில் முடிக்க வேண்டும் என்று பொருளாதாரக் குற்றப் பிரிவு போலீஸாருக்கு, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதுரையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்ட நியோ மேக்ஸ் நிதி நிறுவனத்தில் பணம் முதலீடு செய்தால், 3 ஆண்டுகளில் இரட்டிப்பாக பணம் தருவதாகவும், பணத்துக்கு ஈடாக வீட்டு மனை தருவதாகவும் விளம்பரம் செய்யப்பட்டது.

இதை நம்பி லட்சக்கணக்கானோர், இந்த நிறுவனத்தில் பல நூறு கோடி முதலீடு செய்தனர். ஆனால், முதலீட்டாளர்களுக்கு பணம், வட்டி, நிலம் கொடுக்காமல் மோசடி செய்யப்பட்டது.

இது தொடர்பாக மதுரை பொருளாதாரக் குற்றப் பிரிவு போலீஸார்வழக்கு பதிவு செய்து, நியோமேக்ஸ் இயக்குநர்கள் கபில், கமலக்கண்ணன், பாலசுப்பிரமணியன், வீரசக்தி உள்ளிட்டோரைக் கைது செய்தனர். இவர்கள் டான்பிட் நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்றனர்.

இந்த ஜாமீனை ரத்து செய்யக் கோரி போலீஸார் உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்து நீதிபதி தண்டபாணி பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:

நியோ மேக்ஸ் நிறுவனத்தின் ஆசை வார்த்தைகளை நம்பி 3.6 லட்சம் பேர் முதலீடு செய்துள்ளனர். இதில் 11,179 பேர் மட்டுமே முதலீட்டுப் பணத்தை திரும்பப் பெற்றுள்ளனர். ரூ.10 ஆயிரம் கோடிக்கு மேல் முறைகேடு நடைபெற்றுள்ளது. ரூ.850 கோடி மதிப்பிலான சொத்துகள் இதுவரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

முக்கிய குற்றவாளிகள் கைதுசெய்யப்பட்டு, தற்போது ஜாமீனில்உள்ளனர். இந்த வழக்கில் விசாரணை நீதிமன்றம், வழக்கறிஞர் ஆணையம் அமைத்து பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. வ

ழக்கு விசாரணைக்கு குற்றம் சாட்டப்பட்டவர்கள் முழுமையாக ஒத்துழைக்க வேண்டும்.முதலீடு செய்தவர்களின் விவரங்கள், முதலீடு செய்யப்பட்ட தொகை, நிறுவனத்துக்குச் சொந்தமான இடங்கள், சொத்துகள் விவரங்களை முழுமையாக வழங்க வேண்டும்.

பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸார் பாதிக்கப்பட்டவர்களை முழுமையாக கண்டறியும் வகையிலும், மோசடி தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்கும் வகையிலும் ஊடகங்களில் விளம்பரம் செய்ய வேண்டும். விளம்பரம்கொடுக்கப்பட்ட நாளிலிருந்து 8 வாரங்களுக்குள், பாதிக்கப்பட்டோர் உரிய ஆவணங்களுடன் பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸில் புகார் அளிக்க வேண்டும்.

பாதிக்கப்பட்ட மக்கள் அனைவரிடமும் புகார் பெற்று, விசாரணையை 15 மாதங்களில் முடித்து,சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும். நிதி நிறுவனம் நடத்தி, மோசடி செய்தவர்களின் சொத்துகள் மற்றும் நிறுவனங்களின் பெயரில் உள்ள செத்துகளை கண்டறிந்து, அவற்றை முழுமையாக வழக்கில் இணைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அந்த சொத்துகளுக்கு, சிறப்புநீதிமன்றத்தில் உரிமை பெற்றுவிற்பனை அல்லது ஏலம் விட்டு,அந்தப் பணத்தை நீதிமன்றத்தின் அனுமதியுடன் முதலீட்டாளர்களுக்கு வழங்க வேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவில் தெரிவித்துள்ளார்.

x