நாங்குநேரி கோயில் திருவிழாவில் சாதிய பாகுபாடு புகார்: அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு


மதுரை: நெல்லை மாவட்டம், பருத்திப்பாடு கிராமத்தைச் சேர்ந்த பொன்னுதுரை, உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:

நாங்குநேரி அடுத்த பருத்திப்பாடு கிராமத்தில் சுந்தராட்சி அம்மன் கோயில் திருவிழா வரும்22 முதல் 24-ம் தேதி வரை நடைபெற உள்ளது. திருவிழாவில் பால்குடம், கும்பம், சாமி சப்பர ஊர்வலம் ஆகியவை உயர் சாதியினர் வசிக்கும் தெருக்கள் வழியாக மட்டுமே கொண்டு செல்லப்படுகிறது.

ஆதிதிராவிட சமூகத்தினர் வசிக்கும் தெருக்கள் வழியாக ஊர்வலம் செல்வதில்லை. கோயில் திருவிழாவில் உயர் சாதியினர், ஆதிதிராவிட வகுப்பினரை சாதிப் பாகுபாட்டுடன் நடத்துகின்றனர். எனவே, கோயில் திருவிழாவில் அனைத்து சாதியினருக்கும் சமவழிபாட்டு உரிமை வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில்கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், ஜி.அருள்முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது.அரசு வழக்கறிஞர் வாதிடும்போது, “சாதிப் பாகுபாடு புகார்அடிப்படையில், சேரன்மகாதேவி கோட்டாட்சியர் தலைமையில் அனைத்து தரப்பினரும் அழைக்கப்பட்டு, சமாதானக் கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சாதிப் பாகுபாடு இல்லாமல், திருவிழாவை நடத்த ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன” என்றார்.

இதையடுத்து நீதிபதிகள், “மக்கள் தங்கள் மனதை மாற்றினால் மட்டுமே, கோயில் திருவிழாக்களை சுமூகமாக நடத்த முடியும். மக்கள் மனதில் மாற்றம் ஏற்படாமல், அதிகாரிகள் தலையிட்டு எவ்வாறு திருவிழாவை நடத்த முடியும்? சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டால் தடியடி, துப்பாக்கிச் சூடு அளவுக்கு நிலைமை போகும்.

எனவே, கோட்டாட்சியர் நடத்தும் சமாதானக் கூட்டத்தின் முழுவிவரங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். விசாரணை தள்ளிவைக்கப்படுகிறது” என்று உத்தரவிட்டனர்.

x