சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை விசிக தலைவர் திருமாவளவன் நேற்று சந்தித்துப் பேசினார். அப்போது, பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை, நீட் விவகாரம், மத்திய அரசின் புதிய குற்றவியல் சட்டங்களை சீராய்தல் தொடர்பான கோரிக்கை மனுக்களை அளித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: பகுஜன் சமாஜ்கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலையில் கைது செய்யப்பட்டவர்கள் மட்டுமின்றி, திட்டமிட்டவர்கள் உள்ளிட்ட அனைவரையும் கைது செய்ய வலியுறுத்தியுள்ளோம்.
ஆம்ஸ்ட்ராங் கொலையில் ஆருத்ரா கோல்டு விவகாரமும் பேசப்படுகிறது. மேலும், ஆற்காடு சுரேஷ் மனைவி பாஜக உறுப்பினர் என கூறப்படுகிறது. இதில்,ஆருத்ரா கோல்டு, பாஜக, ஆம்ஸ்ட்ராங் படுகொலை என மூன்று கோணங்கள் இருப்பதாகத் தெரிகிறது. எனவே,காவல் ஆணையரைச் சந்தித்துநேர்மையான முறையில் விசாரணை நடத்த வலியுறுத்தியுள்ளோம்.
முன்னாள் முதல்வர் கருணாநிதியை தனிப்பட்ட முறையில் விமர்சிப்பது அரசியல் அநாகரிகத்தின் உச்சம். நீட் விவகாரம் தேசிய அளவில் பேசப்படுகிறது. தேர்வில் முறைகேடு நடந்தது உறுதி செய்யப்பட்டிருக்கும் நிலையில், இதை மறைக்க பாஜக முயல்கிறது.
இதுதொடர்பாக வரும் 18-ம் தேதிஉச்ச நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வரவுள்ள நிலையில், அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கும், உச்ச நீதிமன்றத்துக்கும் அழுத்தம் கொடுக்க வேண்டும். 3 குற்றவியல் சட்டங்களில் திருத்தம் கொண்டு வரஇண்டியா கூட்டணி கட்சி ஆளும்மாநில முதல்வர்களை தமிழக முதல்வர் தொடர்பு கொண்டு அழுத்தம் கொடுக்க வலியுறுத்தியுள்ளோம்.
திமுக கூட்டணியில் இருந்து, 3ஆண்டுகளில் நாங்கள் முன்னெடுத்த போராட்டங்களை எந்த கட்சியும் எடுத்திருக்காது. அதைப் பாராட்ட மனமில்லாதவர்கள், விசிகவுக்கும் திமுகவுக்கும் முரண்களை ஏற்படுத்துவதற்காக விமர்சிக்கின்றனர்.
பாஜக ஆளும் மாநிலங்களில் பட்டியலினத்தவர்கள் பாதுகாப்பாக உள்ளனரா. நாடு முழுவதும் பட்டியலினத்தவர்கள் காலம்காலமாக பாதிக்கப்படுவது நிதர்சனமான உண்மை. இதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க போராடாமல் அரசியல் செய்கின்றனர் என்றார். விசிக துணை பொதுச்செயலாளர்கள் எஸ்.எஸ்.பாலாஜி எம்எல்ஏ, வன்னியரசு ஆகியோர் உடனிருந்தனர்.