தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் இரண்டாக பிரிப்பு - மத்திய அரசு ஒப்புதல்


சென்னை: தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் (TANGEDCO) இரண்டாக பிரிக்கப்பட்டதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. டான்ஜெட்கோவை இரண்டாக பிரித்த தமிழக அரசின் ஆணைக்கு மத்திய அரசின் எரிசக்தித்துறை ஒப்புதல் அளித்துள்ளது.

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் (TANGEDCO), தமிழ்நாடு மின் உற்பத்தி கழகம்(TNPGCL) மற்றும் தமிழ்நாடு பசுமை எரிசக்தி கழகம் (TNGECL) என இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தமிழ்நாடு மின்சார வாரியம் நிறுவப்பட்டதிலிருந்து தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கிராமங்கள் மற்றும் நகரங்களுக்கு மின் கட்டமைப்பு விரிவுபடுத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாடு மின்சார வாரியம், தமிழ்நாடு மின் உற்பத்தி, பகிர்மானக் கழகம் மற்றும் தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழகம் என நவம்பர் 2010 ஆம் ஆண்டு சீரமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.

இங்கு தேவையான மின்சாரத்தை அனல் மின் நிலையம், நீர் மின் நிலையம், எரிவாயு மின் நிலையங்கள் மூலம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. மேலும், மரபு சாரா எரிசக்தி ஆதாரங்களான காற்றாலை, சூரிய சக்தி, தாவரக்கழிவு மற்றும் இணை மின் உற்பத்தி திட்டங்கள் மூலமாகவும் மின்சாரம் உற்பத்தி செய்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் வழங்கி வருகிறது.

இந்த நிலையில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தினை, தமிழ்நாடு மின் உற்பத்தி கார்ப்பரேஷன் லிமிடெட், தமிழ்நாடு கிரீன் எனர்ஜி கார்ப்பரேஷன் லிமிடெட் என பிரித்ததற்கு தமிழ்நாடு அரசின் எரிசக்தித்துறை ஜனவரி 2024ல் அனுமதி அளித்தது. அதன் அடிப்படையில்,மத்திய அரசின் வர்த்தகத்துறை விதிகளின்படி செயல்படுவதற்கு அனுமதி வழங்கியுள்ளது' இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

x