சென்னை: அமலாக்கத்துறை பதிந்த வழக்கிலிருந்து தன்னை விடுவிக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையை தள்ளி வைக்கக் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுவை சென்னை மாவட்ட அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
முந்தைய அதிமுக ஆட்சிக்காலத்தின் போது போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாக பலரிடம் செந்தில் பாலாஜி பணம் வாங்கி ஏமாற்றியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கடந்த ஆண்டு அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்தது. இதையடுத்து தன்னை இந்த வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி சென்னை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி தரப்பில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதனிடையே ஜாமீன் வழங்கக் கோரி மாவட்ட நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து உச்சநீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி தரப்பில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனு மீது இன்று தீர்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வழக்கு வருகிற 22ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அமலாக்கத்துறை தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்யக் கோரி செந்தில் பாலாஜி தரப்பில் சென்னை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்திருப்பதால் இந்த மனு மீதான விசாரணையை தள்ளி வைக்க வேண்டுமென செந்தில் பாலாஜி தரப்பில் மற்றொரு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு இன்று நீதிபதி அல்லி முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையை ஒத்தி வைக்கக் கோரிய மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார். மேலும் வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக் கோரிய செந்தில்பாலாஜியின் மனு மீதான விசாரணையை வரும் 16ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.