தொடரும் கள்ளச்சாராய சோகம்: செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் மேலும் இருவர் அனுமதி


செங்கல்பட்டு: கள்ளச்சாராயம் அருந்தி ஏற்கெனவே 3 பேர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், இன்று மேலும் இருவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

செங்கல்பட்டு மாவட்டம், மேல்மருவத்தூர் அருகே உள்ள மழுவங்கரணை பகுதியைச் சேர்ந்தவர் தேவன். இவர், மரக்கட்டையிலிருந்து கரி தயாரிக்கும் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் இவரிடம் வேலை செய்யும் கூலி தொழிலாளர்களுக்கு பணி முடிந்த பின்னர், கள்ளச்சாராயம் வழங்கியுள்ளார். இந்த கள்ளச்சாராயத்தை தனது இடத்திலேயே ஊறல் போட்டு தயாரித்து தொழிலாளர்களுக்கு வழங்கி வந்ததாகக் கூறப்படுகிறது.

இது தொடர்பாக கிடைத்த தகவலின் பேரில், மதுராந்தகம் மதுவிலக்கு போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று நேற்று ஆய்வில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த 200 லிட்டர் ஊறல், 10 லிட்டர் கள்ளச்சாராயம் ஆகியவற்றை பறிமுதல் செய்து அழித்தனர். மேலும், சாராயம் ஊறல் போட்ட தேவனை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதனை தொடர்ந்து கள்ளச்சாராயம் அருந்திய குறும்பிரை பகுதியைச் சேர்ந்த அய்யனார், பெருமாள், மணி ஆகிய 3 பேர் மீட்கப்பட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இந்நிலையில் கள்ளச்சாராயம் அருந்திய குறும்பிரை பகுதியைச் சேர்ந்த மதுரை, ராதாகிருஷ்ணன் ஆகிய மேலும் இருவர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் இன்று சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர்.

கள்ளச்சாராயம் அருந்தி சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட 5 பேரும் நலமுடன் இருப்பதாக செங்கல்பட்டு மாவட்ட சுகாதாரத் துறை உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி 65-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து, தமிழக அரசு மாநிலம் முழுவதும் கள்ளச்சாராய ஒழிப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்தியது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் கள்ளச்சாராயம் அருந்தி, அரசு மருத்துவமனையில் 5 பேர் அனுமதிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

x