தேனி: கழிவு நீர் கால்வாய்களாகவே மாறிவிட்ட வைகையின் துணை ஆறுகள்


போடி: தேனி மாவட்டத்தின் பல உள்ளாட்சிகள், தங்கள் பகுதி கழிவுநீர் மற்றும் குப்பைகளை வைகையின் துணை ஆறுகளில் கொண்டு வந்து சேர்க்கின்றன. இதனால் 5 மாவட்டங்களின் குடிநீர் ஆதாரமான வைகை அணை நீரின் தன்மை வெகுவாக பாதித்து வருகிறது.

ஆண்டிபட்டி அருகே அமைந்துள்ள வைகை அணை தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களின் பிரதான நீர் ஆதாரமாக உள்ளது. குடிநீர் மட்டுமல்லாது பாசன தேவையும் இந்த அணை மூலம் பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது. வைகையின் முக்கிய நீர்வரத்துப் பகுதியாக வருசநாடு அருகே உள்ள மேற்குத் தொடர்ச்சி மலை உள்ளது.

அரசரடி, பொம்மிராஜபுரம் உள்ளிட்ட பகுதிகளில் பெய்யும் மழைநீர், ஓடைகள் வழியே சிற்றாறுகளாக மாறி வைகையாக உருவெடுக்கிறது. மேலும், வைகையின் துணை ஆறுகளாக சுருளியாறு, கொட்டக்குடி ஆறு, வரட்டாறு, வராகநதி, முல்லையாறு, கூட்டாறு, மஞ்சளாறு, நாகலாறு, மருதாநதி, பாம்பாறு உள்ளிட்ட ஆறுகள் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்யும் மழைநீரை வைகைக்கு கொண்டு வந்து சேர்க்கின்றன.

வைகையின் பக்கபலமாக விளங்கும் இந்த துணை ஆறுகளில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு நீர்வரத்து அதிகம் இருந்தது. இந்நிலையில் சில வாரங்களாக மழைப்பொழிவு இல்லை. மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதனால் துணை ஆறுகள் இப்போது வறண்டு கிடக்கின்றன, தற்போது இதில் கழிவுநீர் மட்டுமே ஓடுகிறது.

மேலும், குப்பைகளும் அதிகளவில் இந்த துணை ஆறுகளில் கொட்டப்படுகின்றன. இந்த கழிவுகள் ஒவ்வொரு முறை மழை பெய்யும் போதும் வைகை அணைக்கே அடித்துச் செல்லப்படுகின்றன. இதனால் அணை நீரின் கார, அமிலத்தன்மையில் பெரும் மாறுபாடு ஏற்படுகிறது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுகுறித்து இயற்கை ஆர்வலர்கள் கூறுகையில், “ஆறு உள்ளிட்ட நீராதாரங்கள் வழிபாட்டுக்கு உரியதாக இருந்தது. இதனால் நீர் மாசு ஏற்படவில்லை. தற்போது உள்ளாட்சிகளே கழிவுநீரை ஆற்றில் கலக்கவிடுகின்றன. இதைத் தடுத்து நீரின் புனிதம் காக்க நீர்வளத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

5 மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமான வைகை அணை நீரின் சுகாதாரத்தை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காக வழிநெடுகிலும் உள்ள துணை ஆறுகளின் நீர்வழித்தடங்களை ஆய்வு செய்து கழிவுகள் கலக்காத அளவுக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.

x