சீமான் நாக்கை அடக்கி வாசிக்க வேண்டும்: அமைச்சர் கீதா ஜீவன் கண்டனம்


தூத்துக்குடி: முன்னாள் முதல்வர் கருணாநிதியை நாம் தமிழர் கட்சியின் சீமான் கடுமையாக விமர்சித்த நிலையில், அவர் நாக்கை அடக்கி வாசிக்க வேண்டும் என அமைச்சர் கீதா ஜீவன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

விக்கிரவாண்டித் இடைத் தேர்தல் பிரச்சாரத்தின்போது, திமுக முன்னாள் தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான கருணாநிதி குறித்து, யூடியூபரும், நாம் தமிழர் கட்சி நிர்வாகியுமான சாட்டை துரைமுருகன் அவதூறான பாடல் ஒன்றை பாடியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதுகுறித்த புகாரில் திருச்சி சைபர் க்ரைம் போலீஸார், சாட்டை துரைமுருகனை கைது செய்தனர். பின்னர் அவர் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டார். முன்னதாக சாட்டை துரைமுருகன் கைது குறித்து, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர்.

அப்போது, சாட்டை துரைமுருகன் பாடிய பாடலை ஆதரித்து, அவரும் அதே சர்ச்சைக்குரிய பாடலை பாடினார். இந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி, திமுகவினரிடையே பெரும் அதிர்ச்சியையும், ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் தூத்துக்குடியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த சமூக நலத் துறை அமைச்சர் கீதா ஜீவன் கூறியதாவது, "தமிழ்நாட்டு வளர்ச்சிக்காக, தமிழ் மக்களின் வளர்ச்சிக்காக, தமிழ் மொழி வளர்ச்சிக்காக பாடுபட்டவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி. அவர் குறித்து இழிவாக பேசியதை திமுக வன்மையாக கண்டிக்கிறது. தனது கட்சியினர் தவறாக பேசினால் ஒரு கட்சியின் தலைவர் அதை கண்டித்து திருத்த வேண்டும்.

ஆனால், திமுக தலைவர் கருணாநிதி குறித்து, தவறாக பேசுவதை கண்டு சீமான் சிரித்துக் கொண்டிருக்கிறார். எனவே ஒரு தலைவருக்கு உள்ள பண்பு இல்லாமல் கட்சியை வழிநடத்தத் தெரியாமல் சீமான் இருக்கிறார். கருணாநிதி மறைந்தபோது, 'எதிர்கால இளைய சமுதாயத்தினருக்கு கருணாநிதி படிப்பினை. இரவு பகல் பாராது உழைத்தவர், தமிழ்நாட்டில் இருந்த அரசியல் ஆளுமை' என்று அறிக்கை வெளியிட்டார். ஆனால் இன்று மீண்டும் மாற்றி பேசுகிறார்.

ஆளும்கட்சியாக இருப்பதால் திமுகவினர் பொறுமையாக இருக்கிறார்கள். கருணாநிதி குறித்து சாட்டை துரைமுருகன் இழிவாக பேசியதாக வரப்பெற்ற புகாரின் பேரிலேயே அரசு அவரை கைது செய்தது. சீமான் இயக்கிய ‘தம்பி’ படத்தில் சர்ச்சைக்குரிய வார்த்தையை பயன்படுத்தியதற்காக வருத்தம் தெரிவித்தார். மேலும் இந்த வார்த்தை குறித்த அர்த்தம் தனக்கு தெரியாது. இனி இந்த வார்த்தையை பயன்படுத்த மாட்டேன் என கூறியிருந்தார்.

ஆனால் இன்று அதே வார்த்தையை கூறியுள்ளார். சட்டம், ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்தக் கூடியதாக, ஜாதி, மத மோதல்களை ஏற்படுத்துவதாக சீமானின் பேச்சுகள் உள்ளன. கருத்துரிமை பறிக்கப்படுகிறது என கூறுகிறார். தனிப்பட்ட முறையில் தவறான, உண்மைக்கு புறம்பான, சட்டம் - ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் பேசுவது ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல. இலங்கை தமிழர் பிரச்சினையை முன்னிறுத்தி, உலக அளவில் தனது கட்சிக்கு சீமான் பணத்தை பெற்று வருகிறார்.

இலங்கையில் எவ்வாறு ராஜபக்சேவை எதிர்க்கிறோமே, அதேபோன்று தமிழ்நாட்டில் திமுக எதிர்ப்பை காட்டிக்கொள்வதற்காக திமுகவையும், திமுக தலைவர்களையும் அவதூறாக அவர் பேசி வருகிறார். எனவே சீமான், நாக்கை அடக்கி வாசிக்க வேண்டும், அரசியல் அரைவேக்காட்டுத் தனமாக பேசக் கூடாது. பச்சோந்தி போன்று இன்று ஒரு பேச்சு, நாளை ஒரு பேச்சு என சீமான் பேசி வருகிறார். இவர் அரசியல் தலைவருக்கே தகுதியானவர் அல்ல.” இவ்வாறு அமைச்சர் கீதா ஜீவன் கூறினார்.

x