சென்னை: தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கை சீர்குலைக்க சில அரசியல் கட்சிகள், அமைப்புகள் முயற்சிப்பதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், இன்று முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்துப் பேசினார். அப்போது, பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை விவகாரம், தமிழக சட்டம் - ஒழுங்கு நிலவரம் குறித்து முதல்வரிடம், திருமாவளவன் சில கோரிக்கைகளை வலியுறுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் இந்த சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன் கூறியதாவது:
“ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இதனை திட்டமிட்டவர்கள், இதனை நடைமுறைப்படுத்திய கூலி கும்பல் ஆகிய அனைவரையும் கைது செய்ய வேண்டும் என முதல்வரிடம் வலியுறுத்தியுள்ளோம். தமிழகத்தில் சட்டம் -ஒழுங்கை சீர்குலைத்து ஒரு பதற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என சில அரசியல் கட்சிகள், சில அமைப்புகள் திட்டமிட்டு செயல்படுத்தி வருகின்றன.
குறிப்பாக பாஜகவுக்கு இந்த செயல்திட்டம் இருப்பதை அறிய முடிகிறது. ஆம்ஸ்ட்ராங் படுகொலையிலும் கூட ஒரு அரசியல் செயல்திட்டம் இருப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி சந்தேகப்படுகிறது. ஆம்ஸ்ட்ராங் உயிரிழந்த சில நிமிடங்களில் பாஜகவைச் சேர்ந்த ஒருவர் தான் ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்தார்.
அவர் வைத்த கோரிக்கைதான் சிபிஐ விசாரணை. காவல் துறை நடவடிக்கையில் இறங்குவதற்கு முன்னதாகவே பகுஜன் சமாஜ் கட்சி கோரிக்கை வைப்பதற்கு முன்னதாகவே எடுத்த எடுப்பிலேயே, தமிழ்நாடு அரசு இதை விசாரிக்கக் கூடாது, இந்திய ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் சிபிஐ விசாரிக்க வேண்டும் என்ற குரல் பாஜகவின் குரலாக இருந்தது.
அதுதான் பாஜகவின் மாநிலத் தலைவரின் குரலாகவும் அடுத்து ஒலித்தது. ஆருத்ரா கோல்டு நிறுவனத்துக்கும், பாஜகவில் உள்ள சிலருக்கும் இடையில் உள்ள உறவு குறித்து கடந்த சில மாதங்களாக ஒரு வருடத்திற்கு மேலாக பேசப்பட்டு வருவதை நாம் பார்க்கிறோம். ஆருத்ரா கோல்டு விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்கள் பாஜகவில் பொறுப்பில் உள்ளனர்.
இப்போது ஆம்ஸ்ட்ராங் கொலையில் ஆருத்ரா கோல்டு விவகாரமும் பேசப்படுகிறது. பாஜக இதில் வலிந்து தலையிட்டு சிபிஐ விசாரணை கோருகிறது. இதுபோன்ற விவகாரங்கள் புலனாய்வு விசாரணைக்கு உரியவையாக உள்ளன. அவர்களின் அரசியல் செயல் திட்டமானது திமுக அரசுக்கு எதிராக ஒரு பதற்றத்தை ஏற்படுத்த வேண்டும், ஒவ்வொரு வாய்ப்பையும் பயன்படுத்தி சட்டம் - ஒழுங்கை சீர்குலைக்க வேண்டும் என்பதாகத்தான் இருக்கிறது.
அதற்கு துணையாக பல அமைப்புகளும் இங்கே செயல்பட்டு வருவதை காண முடிகிறது. முன்னாள் முதல்வர் கருணாநிதியை தனிப்பட்ட முறையில் விமர்சிப்பது அரசியல் அநாகரித்தின் உச்சமாக இருக்கிறது. கருத்தியல், அரசியல் விமர்சனங்களை வைக்கலாம். ஆனால், கருணாநிதியை கொச்சைப்படுத்துவதின் மூலம் மேலும் பதற்றத்தை உருவாக்க வேண்டும் என்பது அவர்களின் நோக்கம் என்பதை உணர முடிகிறது.
எனவே, அரசியல் செயல்திட்டங்களை வைத்துக்கொண்டு சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க முயற்சிக்கும் விவகாரத்தில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வரிடம் வலியுறுத்தியுள்ளோம்" இவ்வாறு திருமாவளவன் கூறினார்.