மாணவர்களிடையே மது கலாச்சாரம் பெருகிவிட்டதாகத் தமிழக அரசிற்கு எதிராகத் தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது நீதிமன்றம். ஆனால், தனக்கும் அதற்கும் தொடர்பில்லாதது போலத் தமிழக அரசு இன்னமும் இந்த விஷயத்தில் பாராமுகமாகவே இருக்கிறது.
“சீருடையுடன் பள்ளி மாணவர்கள் மது அருந்தும் புகைப்படங்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பள்ளி மாணவர்கள் மது அருந்தும் பிரச்சினைக்கு உரியத் தீர்வு காணப்பட வேண்டும். இல்லாவிட்டால் தமிழகத்தில் மது விற்பனைக்குத் தடை விதிக்க நேரிடும்” என ராம்குமார் ஆதித்தன் என்பவர் தொடர்ந்த வழக்கில் மதுரை உயர் நீதிமன்றம் தமிழக அரசுக்கு எதிராகச் சாட்டையைச் சுழற்றி இருக்கிறது. பள்ளி மாணவர்களின் நலனுக்காக மட்டுமே நீதிமன்றம் இப்படிக் கொந்தளித்ததாக முடிவுக்குவர முடியாது. ஒட்டுமொத்த தமிழகத்தின் நலன் கருதியும் இதைத் தெரிவித்திருப்பதாகவே எடுத்துக்கொள்ள வேண்டி இருக்கிறது.
ராம்குமார் ஆதித்தன் தனது மனுவில், ‘தமிழகத்தில் பண்டிகை காலங்களில் இலக்கு நிர்ணயம் செய்து தமிழக அரசு மது விற்பனை செய்துவருகிறது. இந்தியாவில் மது அருந்துவோர் எண்ணிக்கை சராசரியாக 36 சதவீதம் ஆகும். தமிழகத்தில் மது அருந்துவோர் எண்ணிக்கை சராசரியாக 46.7 சதவீதமாக உள்ளது. மது அருந்துவோர் எண்ணிக்கையில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. பள்ளி மாணவர்கள் சீருடையுடன் மது அருந்தும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் அடிக்கடி வெளியாகின்றன. எனவே, 21 வயதுக்குக் கீழ் உள்ளவர்களுக்கு மதுபானம் விற்கத் தடை விதித்து உத்தரவிட வேண்டும். டாஸ்மாக் விற்பனை நேரத்தை மதியம் 2 மணி முதல் இரவு 8 மணி வரை என மாற்றியமைக்க உத்தரவிட வேண்டும்’ எனத் தெரிவித்திருந்தார்.
குற்றங்களை அதிகரிக்கும் மது விற்பனை
2021-ல் இந்திய அளவில் நடைபெற்ற குற்றங்கள் குறித்த ஆவண அறிக்கையைத் தேசிய குற்றவியல் ஆவணக் காப்பகம் சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதன்படி இந்தியாவில் அதிக விபத்துகள் நடந்த மாநிலங்களில் தமிழகம் முதலிடம் பிடித்துள்ளது. தமிழகத்தில் மட்டும் 55,682 விபத்துகள் நடந்துள்ளன. அதுபோல் அதிக தற்கொலை நடந்த மாநிலங்களில் தமிழகம் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. இந்தியாவில் நடைபெற்ற தற்கொலைகளில் 11.5 சதவீதம் தமிழகத்தில் நடந்தவையே. பெண்கள் மற்றும் சிறார்களுக்கு எதிரான குற்றங்களும் நாளுக்கு நாள் கணிசமான அளவில் அதிகரித்து கொண்டே செல்கிறது. இதற்கெல்லாம் பெரும்பகுதி காரணியாக இருப்பது மது என்பதை மறுக்க முடியாது.
சீரழியும் மாணவர்கள்
பள்ளிச் சீருடையில் மாணவர்கள் மது வாங்குவதும், வகுப்பறையிலேயே மது அருந்துவதும் இப்போது வாடிக்கையாகிவிட்டது. சில மாதங்களுக்கு முன்பு, மாணவிகள் பேருந்தில் மது அருந்தும் வீடியோ வெளியாகி தமிழகத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அதுபோல், பிறந்தநாள் விழாவிற்கு சக மாணவியை அழைத்துச் சென்று ‘பார்ட்டி’ என்ற பெயரில் மது விருந்து வைத்து, அந்த மாணவியையே விருந்தாக்கிய சம்பவங்களும் தமிழகத்தில் அவ்வப்போது நடைபெறத்தான் செய்கிறது.
மதுவில் தொடங்கும் போதை கலாச்சாரம் கள்ளச் சாராயம், கஞ்சா என மாற்றுப் பாதைக்கு மாணவர்களைத் திசைமாற்றி அவர்களின் எதிர்காலத்தையே சீரழிக்கிறது. மாணவர்கள் மது அருந்தும் படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்வலையைக் கிளப்புவது ஒரு பக்கம் என்றால், இதனால் மன உளைச்சலில் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்களும் இன்னொரு பக்கம் தொடர்கின்றன.
திமுகவினர் நடத்தும் மது ஆலைகள்
தமிழ்நாட்டில் பெரும்பாலான மது ஆலைகள் திமுகவினர் வசமே உள்ளதாக அவ்வப்போது செய்திகள் வருகின்றன. டாஸ்மாக் கொள்முதல் செய்யும் மது வகைகள் பெரும்பாலும் இந்த ஆலைகளிலிருந்தே கொள்முதல் செய்யப்படுகின்றன. மதுவிலக்கு குறித்து திமுக அரசு அவ்வளவாய் அக்கறைப் படாததற்கு இதுவும் ஒரு காரணம் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.
மழுங்கிப்போன மதுப் போராளிகள்
அதிமுக ஆட்சியில் மதுவிலக்கு கோரி அடிக்கடி நடைபயணம் மேற்கொண்ட மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தற்போது அதுகுறித்து ஏனோ எதுவும் பேசுவதில்லை. அதேபோல் தான் விசிக தலைவர் திருமாவளவனும் இப்போது மது ஒழிப்பு விஷயத்தில் மௌனமாகவே இருக்கிறார். மதுவுக்கு எதிராக வீதி நாடகம் போட்ட கம்யூனிஸ்ட்களும் இப்போது கப்சிப். மது ஒழிப்பு போராளிகளாக தங்களை அடையாளம்காட்டிக்கொண்ட கோவன், நந்தினி உள்ளிட்டவர்கள் இப்போது எங்கிருக்கிறார்கள் என்றே தெரியவில்லை.
மதுவிலக்கு வாக்குறுதி என்னாச்சு?
1967-ல் தனது கனவுத் திட்டமான ரூபாய்க்கு படி அரிசி திட்டத்திற்காக, மதுவிலக்கை ரத்துசெய்வதை ஏற்றுக் கொள்ளாதவர் அண்ணா. அரசின் வருமானத்துக்காக மதுவிலக்கை ரத்து செய்வதென்பது மூட்டைப் பூச்சிக்கு பயந்து வீட்டைக் கொளுத்துவதற்கு சமம் என்றார் அண்ணா. ஆனால் அண்ணாவுக்குப் பிறகு 1971-ல் ஆட்சிக்கு வந்த கருணாநிதி, மதுவிலக்கை ரத்து செய்தார். “1971-ம் ஆண்டில் நிதி நெருக்கடியால் தான் மதுவிலக்கை ரத்து செய்தேன். அது எனது நெஞ்சில் உறுத்திக்கொண்டே இருக்கிறது” எனப் பின்னாளில் கருணாநிதி சப்பைக்கட்டுக் கட்டினார். இந்நிலையில், 1996-ம் ஆண்டு தொடங்கி 2010-ம் ஆண்டு வரை 5 முறை மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என அறிவித்தார் கருணாநிதி. இதில் நான்கு முறை அவர் முதல்வர் நாற்காலியில் அமர்ந்திருந்தபோதே கூறியது.
தந்தை வழியில் அதிமுக ஆட்சியில் மதுவுக்கு எதிராக முழங்கிய ஸ்டாலின், கரோனா காலத்தில் மதுக்கடைகளை மூடச்சொல்லி வீட்டிலிருந்தே அதிமுக அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்தார். தேர்தல் பிரச்சாரத்தில் தமிழகத்தில் மதுவிலக்கு கொண்டுவரப்படும் என தமிழகம் முழுக்க முழங்கினார். ஆட்சிக்கு வந்து ஆண்டு ஒன்று கடந்துவிட்டது. புதிதாக கடைகளை திறக்கத்தான் செய்கிறார்களே தவிர, திறந்த கடைகளை மூடுவது பற்றி சிந்திக்க திமுக அரசுக்கு நேரமில்லை.
இது பெருமையல்ல...
கடந்த ஏப்ரல் மாதம் சட்டப்பேரவையில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை மானியக் கோரிக்கைக்குப் பதிலளித்துப் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, தமிழகத்தில் 36,013 கோடி ரூபாய் அளவுக்கு மது விற்பனை மூலம் வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாக தெரிவித்தார். 2003-04-ம் நிதியாண்டில் 3,640 கோடியாக இருந்த மது வருமானம் கிட்டத்தட்ட 10 மடங்கு அளவுக்கு அசுர வளர்ச்சி அடைந்துள்ளது. பொருளாதாரத்தில், தொழில் துறையில், வரி செலுத்தும் மாநிலங்களில் தமிழகம் தலைநிமிர்ந்துள்ளது என ஸ்டாலின் பெருமைப்பட்டுக்கொள்ளும் இந்த சமயத்தில், மது வியாபாரம் தொடர்பாக நீதிமன்றம் வைத்திருக்கும் குட்டு தமிழக அரசுக்கு தலைகுனிவுதான்.
“மது விலக்கு அமல்படுத்தப்படும் என திமுக தேர்தல் அறிக்கையில் சொன்னீர்களே... என்னாயிற்று?” என்று திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவில் அங்கம்வகித்த டி.ஆர்.பாலு எம்பி-யிடம் கேட்டதற்கு, “கட்சியில் இருந்துகொண்டு இதைப் பற்றியெல்லாம் நான் சொல்ல முடியுமா?” என்ற எதிர்க் கேள்வியோடு தனது பதிலை முடித்துக்கொண்டார் அவர்.
நீதிமன்றம் இன்னொரு முறை சாட்டையைச் சொடுக்கும் முன்பாகவாவது தமிழக அரசு மதுவிலக்கு குறித்து ஒரு தெளிவான கொள்கை முடிவை எடுக்கும் என நம்புவோம்!