சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக கே.ஆர்.ஸ்ரீராம் நியமனம்!


சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக கே.ஆர்.ஸ்ரீராமை நியமனம் செய்ய உச்ச நீதிமன்றம் கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது.

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக மும்பை உயர்நீதிமன்ற மூத்த நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராமை நியமனம் செய்ய உச்ச நீதிமன்ற கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது. சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கங்கா பூர்வாலா கடந்த மே 23-ம் தேதி ஓய்வு பெற்றார். இதனைத் தொடர்ந்து பொறுப்பு தலைமை நீதிபதியாக ஆர்.மகாதேவன் பதவி வகித்து வந்தார். இந்நிலையில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையில் டெல்லியில் உச்சநீதிமன்ற கொலிஜியம் கூட்டம் நேற்று நடைபெற்றது

இக்கூட்டத்தில் சென்னை உயர் நீமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி ஆர்.மகாதேவனை உச்ச நீதிமன்ற நீதிபதியாக கொலிஜியம் பரிந்துரை செய்தது. அதேபோல மும்பை உயர் நீதிமன்ற மூத்த நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராமை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலம், மும்பையில் பிறந்த கே.ஆர்.ஸ்ரீராம் (கல்பாத்தி ராஜேந்திரன் ஸ்ரீராம்) பி.காம் (நிதிக் கணக்கியல் மற்றும் மேலாண்மை), பி.பி.எல் சட்டப்படிப்பை மும்பை பல்கலைக்கழகத்தில் படித்தார். இதனைத் தொடர்ந்து எல்.எல்.எம் சட்ட மேற்படிப்பை லண்டன் கிங்ஸ் கல்லூரியில் பயின்றார்.

கடந்த 1986 ஜூலை 3-ம் தேதி மகாராஷ்டிரா மற்றும் கோவா பார் கவுன்சிலில் வழக்கறிஞராக கே.ஆர்.ஸ்ரீராம் பதிவு செய்தார். இவர் மூத்த வழக்கறிஞர் எஸ்.வெங்கடேஸ்வரனிடம் ஜூனியராக பணியாற்றினார். வணிக விவகாரங்கள் மற்றும் சர்வதேச வர்த்தக சட்டங்களில் நிபுணத்துவம் பெற்ற கே.ஆர்.ஸ்ரீராம் 2013-ம் ஆண்டு முதல் மும்பை உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக பதவி வகித்து வருகிறார்.

x