தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளுக்கு கணினி ஆசிரியர் பணியிடங்கள்: பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தல்


தமிழகத்தில் 3 கல்வியாண்டுகளில் தரம் உயர்த்தப்பட்ட மேல்நிலைப் பள்ளிகளில் கணினி பாடப்பிரிவில் பயிலும் மாணவர் எண்ணிக்கை விவரங்களை அனுப்பி வைக்குமாறு பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

இது குறித்து பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் எஸ்.கண்ணப்பன் முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு இன்று அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், “தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி கணினி ஆசிரியர்கள் சங்கம் சார்பில் கடந்த ஜூலை 8-ம் தேதி அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில், புதிதாக தரம் உயர்த்தப்பட்டுள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளில் கணினி ஆசிரியர் பணியிடம் வழங்கக் கோரிக்கை பெறப்பட்டுள்ளது.

கடந்த 2017-18 , 2018-19 , 2023-24 ஆகிய கல்வி ஆண்டுகளில் உயர்நிலை பள்ளிகளில் இருந்து மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டு செயல்பட்டு வரும் பள்ளிகளுக்கு கணினி ஆசிரியர் பணியிடம் உருவாக்கப்படவில்லை.

ஆனால், பெற்றோர்கள் மற்றும் மாணவர்களின் நலன் கருதி கணினி அறிவியல் மற்றும் கணினி பயன்பாடுகள் பாடப்பிரிவு நடைபெற்று வருகிறது எனத் தெரிய வருகிறது. எனவே, மேற்கண்ட ஆண்டுகளில் தொடங்கப்பட்ட மேல்நிலைப் பள்ளிகளில் கணினிப் பிரிவில் பயிலும் மாணவர்கள் எண்ணிக்கை சார்பான விவரங்களை மாவட்ட அளவில் தயாரித்து இணை இயக்குநர் ( மேல்நிலைக்கல்வி) மின்னஞ்சல் முகவரிக்கு உடனடியாக அனுப்புமாறு அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” என்று கூறப்பட்டுள்ளது.

x