வாசிப்பை ஊக்குவிக்க நடவடிக்கை - ஆசிரியர் பயிற்சி நிறுவனம் புதிய முயற்சி!


வாசிப்பை மேம்படுத்த அரசு மற்றும் தன்னார்வ அமைப்பினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக புத்தக கண்காட்சிகள் உள்ளிட்டவை பரவலாக நடத்தப்பட்டு வருகிறது. இது வாசிப்பை ஊக்குவிக்கும் விதமாக அமைகிறது. அந்த வகையில் நாமக்கல் மாவட்ட அரசு ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில், ஆசிரியர்களுக்கு நடத்தப்படும் பல்வேறு பயிற்சிகளின் போது தேநீர் மற்றும் உணவு இடைவேளையில், உணவுடன் புத்தகம், தேநீருடன் செய்தித்தாள் என்ற தலைப்பில் வாசிப்பு பழக்கம் ஊக்குவிக்கப்பட்டு வருவது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

இது குறித்து ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் செல்வம் கூறுகையி்ல், ”இன்றைய கால கட்டத்தில் சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை எவ்வித பாகுபாடுமின்றி ஆண்ட்ராய்டு போன்களில் தங்களது பொழுதை போக்குகின்றனர். இதன் ஆக்கிரமிப்பால் வாசிப்பு பழக்கம் நாளுக்கு நாள் அருகி வருகிறது. இதை மேம்படுத்த பயிற்சி நிறுவனத்தில் சிறு முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. கல்லூரி வளாகத்தில் கல் இருக்கைகள் சமீபத்தில் அமைக்கப்பட்டது. மரங்கள் சூழ்ந்த இடத்தில் இந்த இருக்கை அமைக்கப்பட்டுள்ளது. இங்கு எண்ணும், எழுத்தும் என்பது உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது” என்றார்.

மேலும், ”இந்த பயி்ற்சிகளின் போது தேநீர் மற்றும் உணவு இடைவேளை விடப்படுகிறது. அந்த நேரத்தை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தும் வகையில் தேநீர் இடைவேளையின்போது புத்தகங்கள் வைக்கப்படுகிறது. உணவை சாப்பிட்டவுடன் ஆசியர்கள் புத்தகங்களை வாசித்து தங்களுக்குள் கலந்துரையாடல் செய்வர். இது பயனுள்ளதாக இருப்பதாக தெரிவித்த ஆசிரியர்கள் இதனை தங்களது பள்ளிகளிலும் செயல்படுத்தியுள்ளனர்.” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், “இங்கு வாசிக்கும் கதை, கவிதைகளை ஆசிரியர்கள் தங்களது பள்ளி மாணவ, மாணவியருக்கு மட்டுமின்றி தங்களது குழந்தைகளுடன் பகிர்ந்து கொள்ள வாய்ப்பாக அமைகிறது. சிறிய முயற்சி தான். எனினும், அருகி வரும் புத்தக வாசிப்பை இது மேம்படுத்தும்” என்றார்.

x